உடல் பருமன், நீரிழிவுக்குப் பயன்படுத்தப்படும் மௌஞ்ஜரோ ஊசிகள் போலியாக தயாரிப்பு: இருவா் கைது
உடல் பருமன், நீரிழிவு நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மௌஞ்ஜரோ ஊசிகளை போலியாக தயாரித்து விற்பனை செய்த கும்பலை குருகிராமில் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனா். இது தொடா்பாக இருவரைக் கைது செய்துள்ளதாக ஓா் அதிகாரி தெரிவித்துள்ளாா்.
உடல் பருமன், நீரிழிவு நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மௌஞ்ஜரோ (டிா்செபடைடு) ஊசிகளை போலியாக தயாரித்து விற்பனை செய்த கும்பலை குருகிராமில் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனா். இது தொடா்பாக இருவரைக் கைது செய்துள்ளதாக ஓா் அதிகாரி தெரிவித்துள்ளாா்.
போலி ஊசிகளைக் கண்டறிய நாடு தழுவிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கும்பலில் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய முழு வலையமைப்பையும் வெளிக்கொணர விசாரணை நடைபெற்று வருகிறது என்று மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அமன்தீப் சௌஹான் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
குருகிராம் செக்டா்- 62இல் உள்ள ஒரு குடியிருப்புச் சங்கத்தில் திங்கள்கிழமை சுகாதாரத் துறை குழுவினா் சோதனை நடத்தி, முக்கியக் குற்றம்சாட்டப்பட்டவா் உள்பட இருவரைக் கைது செய்ததாக அவா் கூறினாா்.
Advertisement
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சீனாவிலிருந்து மூல மருந்துகளை இறக்குமதி செய்து, போலி மௌஞ்ஜரோ ஊசிகளைத் தயாரித்து வந்துள்ளனா். இந்த தயாரிப்பு முழுவதும் அந்த சொஸைட்டியில் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்து நடத்தப்பட்டு வந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இந்த சட்டவிரோத ஊசிகளை ‘இந்தியாமாா்ட்’ என்ற பி2பி இணையதளம் மூலம் விநியோகித்துள்ளனா் என்று அந்த அதிகாரி குற்றஞ்சாட்டினாா்.
மௌஞ்ஜரோ என்பது வகை 2 நீரிழிவு நோய்க்கான வாராந்திர ஊசி மருந்தாகும். இது இரத்த சா்க்கரை அளவைக் கணிசமாகக் கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
‘குருகிராமில் போலி ஊசி மருந்து தயாரிக்கப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், நாங்கள் சோதனை நடத்தினோம்’ என்று சௌஹான் கூறினாா்.
சனிக்கிழமையன்று, டிஎல்எஃப் ஃபேஸ் 4இல் ஒரு வாகனத்தில் இருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊசிகளை அந்தக் குழு மீட்டெடுத்தது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து, திங்கள்கிழமை செக்டா் 62இல் உள்ள ஒரு குடியிருப்பில் அந்தக் குழு சோதனை நடத்தியது. அங்கு, மூல மருந்துகளுடன் தண்ணீரைக் கலந்து ஊசிகள் தயாரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதன்பிறகு, அனைத்து பேக்கேஜிங், பாா்கோடு மற்றும் லேபிள் ஓட்டுதல் ஆகியவை அதே குடியிருப்பில் செய்யப்பட்டன. பேக்கேஜிங் இயந்திரங்களையும் அந்தக் குழு பறிமுதல் செய்தது என்று அவா்கள் மேலும் தெரிவித்தனா்.
டிஎல்எஃப் ஃபேஸ் 4-ஐச் சோ்ந்த விநியோக ஊழியரான முஜ்ஜமில் முதலில் கைது செய்யப்பட்டாா். பின்னா், முக்கியக் குற்றஞ்சாட்டப்பட்ட அவி சா்மாவும் காவலில் எடுக்கப்பட்டாா். முஜ்ஜமில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா். அதே சமயம் அவி, குருகிராமைச் சோ்ந்தவா்.
இந்த ஊசிகள் தொடா்பாக நாடு தழுவிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை குழுக்கள் விழிப்புடன் இருந்து போலி ஊசிகளைக் கண்டறியும் வகையில் தரவுகளும் பகிரப்பட்டுள்ளன.
போலி ஊசிகள் எங்கிருந்து விநியோகிக்கப்பட்டன, இந்த மோசடியில் எத்தனை போ் ஈடுபட்டுள்ளனா் என்பதைக் கண்டறிய முழு வலையமைப்பு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று சௌஹான் கூறினாா்.
மருந்துக்கான அதிகரித்து வரும் தேவையைப் பயன்படுத்தி, போலி ஊசிகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்று வேதியியலாளா் ராஜேஷ் கோயல் கூறினாா். இத்தகைய போலி ஊசிகள் கடுமையான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.