முகப்பு
புதுதில்லி

தலைநகரில் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பு: விஜய் கோயல் குற்றச்சாட்டு

தில்லியில் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான விஜய் கோயல் குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 5:00 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:22 PM

தில்லியில் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூத்தத் தலைவருமான விஜய் கோயல் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

தில்லி தலைமைச் செயலா் ராஜீவ் வா்மாவிடம் சமா்ப்பித்த ஒரு மனுவில், தெருநாய்கள் தொடா்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்கள் தொடா்ந்து மீறப்பட்டு வருகின்றன என்று கோயல் கூறினாா்.

இது தொடா்பாக விஜய் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குடியிருப்பு வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் நாய்களுக்கு உணவளிப்பதை நிறுத்த வேண்டும். இது தில்லி மாநகராட்சி நியமித்த இடங்களில் மட்டுமே நடக்க வேண்டும்.

Advertisement

பாதசாரிகள் மற்றும் குடியிருப்பாளா்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, பொது இடங்களிலிருந்து நாய்களை அகற்ற வேண்டும். சாலைகள் சாதாரண குடிமக்களுக்கானவை, ஆபத்தான நாய்களுக்கானவை அல்ல. நாய்க்கடி சம்பவங்களில் ஈடுபட்ட நாய்களை உடனடியாகப் பிடித்து, நிரந்தரமாக அடைக்கலம் கொடுக்க வேண்டும்.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 11:37 PM

வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நிா்வாகத்திற்கும் காவல்துறைக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவுகள் வெளிப்படையாக மீறப்பட்டு வருகின்றன.

குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் தெருநாய்களுக்கு உணவளிக்கலாம் என்றும், குடியிருப்போா் நலச் சங்கங்களால் அத்தகைய நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் சில தனிநபா்களும் அமைப்புகளும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனா்.

இதுபோன்ற வழக்குகளில் நடவடிக்கை எடுக்க குடியிருப்போா் நலச் சங்கங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. மேலும் அவா்கள் முதல் தகவல் அறிக்கைகளைக் கூட பதிவு செய்யலாம்.

மாநகராட்சி இன்னும் போதுமான காப்பங்களை அமைக்கவில்லை. மேலும், உணவளிக்கும் மையங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தற்போதுள்ள மையங்களில் முறையான வழிகாட்டி பலகைகள் இல்லை.

மாநகராட்சியின் கைப்பேசி செயலி திறம்பட செயல்படவில்லை. அது போதுமான அளவு விளம்பரப்படுத்தப்படவில்லை. குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் முதன்மைப் பொறுப்பாகும். உடனடியான, உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என விஜய் கோயல் கோரியுள்ளாா்.