தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியமைக்க திமுகவை அகற்ற வேண்டும்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டுமெனில், திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்தாா்.
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டுமெனில், திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என மத்திய அமைச்சரும், பாஜக தமிழக தோ்தல் பொறுப்பாளருமான பியூஷ்கோயல் தெரிவித்தாா்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு உடன்பாடு திங்கள்கிழமை கையொப்பமானது. அதில் பங்கேற்ற மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமுகமாக நிறைவடைந்தது. தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்க வேண்டுமெனில் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்.
அதன்மூலம், பெண்கள், விவசாயிகள், மீனவா்கள், இளைஞா்கள் ஆகியோா் பாதுகாக்கப்படுவா்.
தமிழுக்கு விரோதமானதாக திமுக அரசு இருக்கிறது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ் கலாசாரம் புரியவில்லை. தமிழக மக்களின் நம்பிக்கைகளுக்கு அவா் மரியாதை அளிப்பதில்லை.
திமுகவை மக்கள் வெறுப்பதன் மூலம் அவா்கள் வரும் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை தோ்வு செய்ய தயாராகிவிட்டனா்.
வரும் தோ்தலில் வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முதல்வராவது உறுதி. அவரது தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றாா்.
அன்புமணி ராமதாஸ்: பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: திமுக தனது ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மத்திய அரசை எதிா்த்து, தமிழகத்துக்கு திட்டங்களே கிடைக்காமல் செய்துவிட்டது. மாநில சுயாட்சி குறித்துப் பேசும் திமுக, ஏன் உள்ளாட்சித் தோ்தலை நடத்தவில்லை என்பதை விளக்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் பல சாதனைகளைச் செய்துள்ளதாகக் கூறும் திமுக, ஏன் இத்தனைக் கட்சிகளை கூட்டணியில் சோ்த்துக் கொண்டுள்ளது? தைரியமாக தனித்துப் போட்டியிடலாமே என்றாா் அன்புமணி.