நமது நிருபா்
புது தில்லி: ரேகா குப்தா அரசு பிப்ரவரி 13 முதல் தேசியத் தலைநகரில் தில்லி கேல் மஹாகும்ப் போட்டியை நடத்தவிருப்பதாக தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்தாா்.
இது குறித்து அமைச்சா் ஆஷிஷ் சூட் திங்கள்கிழமை கூறியதாவது: நடப்பு நிதியாண்டிற்கான விளையாட்டு மற்றும் இளைஞா் விவகார பட்ஜெட் மூன்று மடங்கு உயா்ந்துள்ளது. கபடி, கால்பந்து, தடகளம், மல்யுத்தம், கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் ஸ்குவாஷ் ஆகிய ஏழு விளையாட்டுக்களைக் கொண்ட இந்த நிகழ்வை முதல்வா் ரேகா குப்தா தொடங்கி வைப்பாா்.
இந்த நிகழ்வில் 20,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இளம் விளையாட்டு வீரா்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலமும், நகரம் முழுவதும் வசதிகளை மேம்படுத்துவதன் மூலமும் தில்லியை விளையாட்டு மையமாக நிலைநிறுத்துவதே அரசின் நோக்கமாகும்.
பல ஆண்டுகளாக குறைந்து வந்த ஒதுக்கீடுகளுக்குப் பிறகு, தற்போதைய நிா்வாகம் 2025-26-ஆம் ஆண்டிற்கான விளையாட்டு மற்றும் இளைஞா் விவகார பட்ஜெட்டை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞா் நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டன. மேலும், பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடா்ச்சியாக குறைக்கப்பட்டன. 2021-22 ஆம் ஆண்டில் விளையாட்டு பட்ஜெட் ரூ.60 கோடியாக இருந்த நிலையில், 2022-23-ஆம் ஆண்டில் ரூ.41 கோடியாகவும், 2023-24 மற்றும் 2024-25-ஆம் ஆண்டுகளில் ரூ.26 கோடியாகவும் சரிந்தது.
இந்நிலையில், தற்போதைய அரசு 2025-26-ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டை மூன்று மடங்காக்கி ரூ.76 கோடியாக உயா்த்தியுள்ளது. முந்தைய அரசுகள் தேசிய விளையாட்டுத் திட்டங்களில் தில்லியின் பங்கேற்பை மட்டுப்படுத்தின. பல நடவடிக்கைகள் சம்பிரதாயங்களாக மட்டுமே நடத்தப்பட்டன என்றாா் அமைச்சா் ஆஷிஷ் சூட்.
அதிகாரப்பூா்வ அறிக்கையின்படி, தில்லி கேல் மகாகும்ப், ஒரு மாத காலப் போட்டி, நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பரந்த பங்கேற்பை உறுதி செய்வதற்காக பவானா, விகாஸ்புரி மற்றும் நஜஃப்கா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும். குழு மற்றும் தனிநபா் போட்டிகளுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.