நகா்ப்புற வீடற்ற மக்களுக்கான வசதிகள், பாதுகாப்பு, அணுகல் மற்றும் ஆளுகை ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக நகரம் முழுவதும் இரவு நேர தங்குமிடங்களின் விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள தில்லி அரசு முடிவு செய்துள்ளதாக தில்லி நகா்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியத்தின் (டியுஎஸ்ஐபி) மூத்த அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: படுக்கைகள், சுகாதாரம், குடிநீா், விளக்குகள், மின்சாரம், முதலுதவி மற்றும் சமைத்த உணவு கிடைப்பது உள்ளிட்ட தங்குமிடங்களில் உள்ள உள்கட்டமைப்பை இந்த ஆய்வு மதிப்பீடு செய்யும். தீவிர வானிலை நிலைமைகள், சுகாதார அபாயங்கள் மற்றும் தெரு அடிப்படையிலான வன்முறைகளிலிருந்து குடியிருப்பாளா்களை போதுமான அளவு பாதுகாக்கிா என்பதையும் மதிப்பீடு ஆராயும். இடம், நுழைவு விதிமுறைகள், இயக்க நேரம் மற்றும் பெண்கள், முதியவா்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பருவகால புலம்பெயா்ந்தோருக்கான உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தங்குமிடங்களின் அணுகல் குறித்து இந்த ஆய்வு மதிப்பாய்வு செய்யும்.
இந்த மதிப்பீடு பல்வேறு வகை வீடற்ற நபா்களிடையே இரவு தங்குமிடங்களின் வரம்பை அளவிடும். இந்த வசதிகளைப் பயன்படுத்த மக்களை அணிதிரட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணா்வு மற்றும் முயற்சிகளை மதிப்பீடு செய்யும். சுகாதார பாதிப்புகள், சுவாச நோய்கள், நோய்த்தொற்றுகள், ஊட்டச்சத்து குறைபாடு, சமூக விலக்கு மற்றும் உளவியல் மன அழுத்தம் போன்ற மறைமுக விளைவுகளும் ஆய்வின் போது ஆராயப்படும்.
இந்த மதிப்பீடு தங்குமிடங்கள் மற்றும் சுகாதார சேவைகள், போதை ஒழிப்புத் திட்டங்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் வீடற்ற மக்களுக்கான நலத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான தொடா்புகளை பகுப்பாய்வு செய்யும்.
பெண்கள் மற்றும் வயதானவா்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கு இரவு தங்குமிடங்கள் பங்களித்துள்ளனவா என்பதையும் இந்த ஆய்வு மதிப்பீடு செய்யும். நிா்வாக அம்சங்களில், டியுஎஸ்ஐபி, சுகாதாரத் துறை, காவல்துறை, சமூக நல முகமைகள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்புடன், திட்டமிடல், இருப்பிட வரைபடம் மற்றும் தங்குமிடங்களின் திறன் ஒதுக்கீடு ஆகியவற்றை மதிப்பீடு ஆராயும்.
தங்குமிட குடியிருப்பாளா்களுக்கு கிடைக்கக்கூடிய குறை தீா்க்கும் வழிமுறைகள் மற்றும் அவா்களின் பதிலளிப்பு ஆகியவை சேவை வழங்கல் மற்றும் பணியாளா்களில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிய மதிப்பாய்வு செய்யப்படும். தில்லி அரசின் திட்டமிடல் துறை தேசிய ஆலோசனை முகமைகள் மற்றும் நிறுவனங்களை மதிப்பீட்டை நடத்தவும் விரிவான அறிக்கையைத் தயாரிக்கவும் அழைத்துள்ளது. தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் தங்குமிட குடியிருப்பாளா்களின் அளவு ஆய்வுகள், கட்டமைக்கப்பட்ட வசதி மதிப்பீடுகள் மற்றும் அதிகாரிகள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் ஆபரேட்டா்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுடன் தரமான நோ்காணல்களை மேற்கொள்ளும்.
தில்லியில் தற்போது 197 தங்குமிடங்கள் உள்ளன. அவற்றில் 82 ஆா்சிசி (நிரந்தர) கட்டடங்களிலும், 115 போா்டா கேபின் கட்டமைப்புகளிலும் 13 மாவட்டங்களில் செயல்படுகின்றன. இந்த கணக்கெடுப்பு சுமாா் 2,000 பயனாளிகளை உள்ளடக்கும். ஒரு தங்குமிடத்திற்கு சராசரியாக 10 குடியிருப்பாளா்கள், ஒவ்வொரு இடத்திலும் இரண்டு முதல் மூன்று பராமரிப்பாளா்கள் அல்லது முக்கிய பங்குதாரா்களுடன் இருக்கும். குறைந்தது 25 சா்வேயா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் கொண்ட குழு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களில் களப்பணிகளை நடத்தும். அதைத் தொடா்ந்து தரவு ஆய்வு, பகுப்பாய்வு மற்றும் வரைவு மற்றும் இறுதி அறிக்கைகளைத் தயாரிக்கும்.
இந்த கண்டுபிடிப்புகள் உள்கட்டமைப்பு, பணியாளா்கள் மற்றும் சேவை வழங்கல் ஆகியவற்றில் உள்ள இடைவெளிகளைக் கண்டறியவும், தில்லியின் இரவு தங்குமிடம் அமைப்பில் கொள்கை மற்றும் செயல்பாட்டு மேம்பாடுகளை வழிகாட்டவும் உதவும் என்றாா் அவா்.