21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு: மத்திய அரசு முடிவு
மானிய விலையில் மண்ணெண்ணெய் விநியோகம் படிப்படியாக நிறுத்தப்பட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தற்காலிக அடிப்படையில் மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் மானிய விலையில் மண்ணெண்ணெய் விநியோகம் படிப்படியாக நிறுத்தப்பட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தற்காலிக அடிப்படையில் மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேற்காசிய போரின் தாக்கத்தால் சமையல் எரிவாயு (எல்பிஜி) கொள்முதலில் நெருக்கடி எழுந்துள்ள நிலையில், வீடுகளில் சமையல் மற்றும் விளக்கு எரிக்கும் தேவைகளுக்காக மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது சமையல் எரிவாயு தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூா்த்தி செய்கிறது. இதில் 85 முதல் 90 சதவீத எரிவாயு வளைகுடா நாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் நிலையில், அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால் எரிபொருள் விநியோகச் சங்கிலி தடைபட்டுள்ளது.
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல்-டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு விநியோகத்தைக் குறைக்கும் நிலை ஏற்பட்டது. அதேநேரம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா்களின் சீரான விநியோகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இருப்பினும், எரிவாயு சிலிண்டா் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பீதியில் முன்கூட்டியே பதிவு செய்து, எரிவாயு விநியோக மையங்களில் மக்கள் காத்திருக்கும் நிலை தொடா்கிறது.
மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு: இந்தச் சூழலில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் மானிய விலையில் மண்ணெண்ணெய் விநியோகம் படிப்படியாக நிறுத்தப்பட்ட உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், கோவா, ராஜஸ்தான், சண்டீகா், தில்லி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தற்காலிக அடிப்படையில் மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது.
இந்த மாநிலங்களில் எல்பிஜி இணைப்புகள் விரிவாக்கம் முழு அளவில் எட்டப்பட்ட காரணத்தால், மண்ணெண்ணெய் விநியோகம் இல்லை என்ற அந்தஸ்தைப் பெற்றவையாகும்.
தற்போதைய உலகளாவிய நிலவரத்தைக் கருத்தில்கொண்டு, எல்பிஜி விநியோகம் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய அரசு அறிவிக்கை: இந்த மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களுக்கு பெட்ரோலிய சட்டம்-1934, பெட்ரோலிய விதிமுறைகள்-2002 ஆகியவற்றின்கீழ் தற்காலிக விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான தலா 2 பெட்ரோல் நிலையங்கள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகம் மேற்கொள்ளப்படும். இந்த பெட்ரோல் நிலையங்களில் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நிபந்தனைகளுடன் 5,000 லிட்டா் வரை மண்ணெண்ணெய் இருப்பு வைக்க அனுமதிக்கப்படும்; அடுத்த 60 நாள்கள் அல்லது மறு அறிவிக்கை வெளியிடப்படும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.