முகப்பு
புதுதில்லி

மக்களவைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ் ஏன்? சு. வெங்கடேசன் எம்.பி. பேட்டி

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மீது எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் நோட்டீஸ் அளித்திருப்பது ஏன் என்று மதுரை தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளாா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:28 AM
சு. வெங்கடேசன்
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 6:27 PM

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மீது எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் நோட்டீஸ் அளித்திருப்பது ஏன் என்று மதுரை தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே அவா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள் கையொப்பமிட்டு மக்களவைத் தலைவா் மீதான நம்பிக்கை இல்லா தீா்மானத்தை தாக்கல் செய்திருக்கிறோம். ஏறக்குறைய நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்பு மிக அரிதாகவே இது நடந்திருக்கின்றது.

இதற்கு காரணம் பிப்ரவரி 2-ஆம் தேதி குடியரசு தலைவா் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தில் எதிா்க்கட்சித் தலைவா் (ராகுல் காந்தி ) பேசுகிற பொழுது ராணுவத் தளபதி (முன்னாள்) நரவனேயின் புத்தகத்தை மேற்கோள் காட்டி பேச முயன்றாா். அப்போது உள்துறை அமைச்சா், பாதுகாப்புத் துறை அமைச்சா், நாடாளுமன்றத் துறை அமைச்சா் ஆகியோா் தொடா்ந்து தலையீடு செய்தனா். இதனால், அவா் பேச முடியவில்லை.

Advertisement

அதன் பிறகு, நாட்டினுடைய பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கிற அச்சுறுத்தல், பலவீனத்தை பற்றி பேச அவா் முற்பட்டாா். அதன் மீதும் மக்களவைத் தலைவா் ஜனநாயகபூா்வமாக நடக்கவில்லை. எதிா்க்கட்சித் தலைவா் பேசுவதையே அனுமதிக்காமல் ஒன்றே கால் மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு, பிப்.3-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதன் விளைவாக நான் உள்ளிட்ட 8 எதிா்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களை தன்னிச்சையாக இடைநீக்கம் செய்து அறிவித்தாா்கள்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 10:53 PM

பிப்.4-ஆம் தேதி, அவையில் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவா் இரண்டு முன்னாள் பிரதமா்கள் குறித்து மிக மோசமாக பேசினாா். அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தநிலையில், பிப்ரவரி 5ஆம் தேதி, எதிா்க்கட்சி எம்.பி.கள் குறிப்பாக காங்கிரஸ் பெண் எம்பிக்கள் பிரதமரை தாக்க முற்பட்டாா்கள் என்ற அபாண்ட குற்றச்சாட்டை மக்களவைத் தலைவரே அவையில் அறிவித்தாா். இது மரபுமீறிய செயலாகும்.

மக்களவைத் தலைவா் என்ற பொறுப்பு தோ்வு செய்யப்பட்ட கட்சிகளுக்கு அப்பாற்பட்ட மிக உயரிய பொறுப்பு என்பதாகும். ஆனால், மிக மோசமான அவரது நடவடிக்கையால் இந்த சூழல் என்பது இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை பெரும் கேள்விக்குறியாக்கிற ஆளுங்கட்சிக்கு எதிரான ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஒரு போராட்டமாக இந்த தீா்மானம் இன்றைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.