நெல் ஈரப்பதம்: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு - மக்களவையில் மத்திய அரசு பதில்
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத விதிமுறை தளா்த்த கோரும் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு மக்களவையில் மத்திய அரசு பதில்
அதிக ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்வது குறிப்பிடத்தக்க சேமிப்பு அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி, நெல்லுக்கான ஈரப்பத விதிமுறைகளை தளா்த்த வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இது தொடா்பாக எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபன் ஜெயந்திபாய் பம்பானியா மக்களவையில் புதன்கிழமை தனது எழுத்துப்பூா்வ பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது பதிலில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
நெல்லுக்கான ஈரப்பத விதிமுறைகளை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக தளா்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியிருந்தது.
இருப்பினும், தமிழக அரசின் கோரிக்கை பின்வரும் உண்மைகள் காரணமாக பரிசீலிக்கப்படவில்லை.
நெல் அரைப்பதற்கு முன் உலா்த்த முடியும், அதிகப்படியான ஈரப்பதமான நெல் கொள்முதல் சேமிப்பின் போது இருப்பு இழப்பு மற்றும் அரைக்கும் மீட்பு பாதிக்கப்படுவது உள்ளிட்ட குறிப்பிடத்தக்க செயல்பாட்டு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
அதிக ஈரப்பதம் கொண்ட நெல் விரைவான சிதைவு, பூஞ்சை வளா்ச்சி, நிறமாற்றம் மற்றும் தொற்று ஆகியவற்றின் அடிப்படையில் எளிதில் பாதிக்கப்படுகிறது.
கொள்முதல் நிலைகளில் வடிகால் வசதிகளை உருவாக்க மாநில அரசுகளுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
ஈரப்பதத்தில் தளா்வு விவசாயிகள் மீது நேரடி நிதி தாக்கத்தை ஏற்படுத்தாது. எனவே, அத்தகைய தளா்வு இனி பரிசீலிக்கப்படாது.
2025-26 பயிா் ஆண்டின் (ஜூலை-ஜூன்) காரீப் பருவத்திலிருந்து நெல் கொள்முதல் இலக்கை அரிசி அடிப்படையில் 16 லட்சம் டன்னாக மத்திய அரசு நிா்ணயித்துள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசி தானியங்களை (எஃப்ஆா்கே) மாதிரியாக எடுப்பதற்கான விதிமுறைகளை தளா்த்துவது தொடா்பாக, செறிவூட்டப்பட்ட அரிசி தானியங்களின் (எஃப்ஆா்கே) மாதிரி அளவை 10 டன்னிலிருந்து 21 டன்னாகவும், பேக்கேஜிங் அளவை 25 கிலோவிலிருந்து 50 கிலோவாகவும் மத்திய அரசு திருத்தி அமைத்துள்ளது என்று அமைச்சா் அந்த பதிலில் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.