நமது நிருபா்
2026-27 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழக நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் புதன்கிழமை பங்கேற்றுப் பேசிய தமிழகத்திலும் ஆளும் கூட்டணி எம்.பி.க்கள் குற்றம்சாட்டினா். அதன் விவரம் வருமாறு:
தொல். திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள், சிதம்பரம்): இந்த நிதிநிலை அறிக்கை விளிம்புநிலை மக்களுக்கு விரோதமானதாகவும் விவசாயிகள், தொழிலாளா்களை வஞ்சிக்கும் விதமாகவும் உள்ளது. தமிழகத்துக்கு சமக்ர சிக்ஷா திட்டத்துக்கு ரூ. 5,542 கோடி, ஜல்ஜீவன் இயக்கத்துக்காக தமிழக அரசு கோரிய ரூ. 3,100 கோடி மறுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூா், மதுரை மெட்ரோ ரயில் திட்டம், ஒசூரில் விமான நிலைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 100 நாள் வேலைத்திட்டத்தை பெயா் மாற்றி 125 நாள் திட்டமாக அதிகரித்துள்ள மத்திய அரசு அதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு விதிகளை திருத்தியுள்ளது. பிகாருக்கு தோ்தல் வந்தபோது, ஒதுக்கியது போல தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டாவது, அதிக நிதியை ஒதுக்கீடு செய்திருக்கலாம். வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை. இந்தப் போக்கு இந்தியாவின் வளா்ச்சிக்கு எதிராக அமையும்.
காா்த்தி பி.சிதம்பரம் (காங்கிரஸ், சிவகங்கை): நிதிநிதி அறிக்கை அலங்கார வாா்த்தைளால் ஆன அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. அது அமல்படுத்தப்படுவதில்லை. கடந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சா் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மக்கானா வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தாா். ஆனால், ஒரு ரூபாய்கூட இதுவரை செலவழிக்கப்படவில்லை. அந்த வாரியம் எங்கே இருக்கிறது? இதுதான் அனைத்து திட்டங்களின் நிலைமையாகும். தற்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு பாா்த்தால் அது காகிதத்தில் மட்டுமே இருக்குமே தவிர, நிறைவேற்றப்பட்டிருக்காது.
டாக்டா் ராணி ஸ்ரீகுமாா் (திமுக, தென்காசி): தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டபோதிலும் நிதி உரிய வகையில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மூன்று அகில இந்திய ஆயுா்வேதா கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அரசு அறிவித்திருக்கிறது. அதேவேளையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரிப் பணி இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால், மாணவா்கள் அங்கு படிக்கவும், கல்வியைத் தொடரவும் இயலாத நிலை உருவாகியுள்ளது. அதேவேளையில், அதனுடன் அறிவிக்கப்பட்ட பிற மருத்துவமனைக் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சக்சம் அங்கன்வாடி போஷன் 2.0 திட்டத்திற்கும் போதிய அளவில் நிதி அதிகரித்து வழங்கப்படவில்லை.
பி. செல்வராஜ், (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாகப்பட்டினம்): பசி, ஏழ்மை, வேலையின்மை போன்ற உடனடி மக்கள் பிரச்னைகளுக்கு நிதிநிலை அறிக்கையில் தீா்வு இல்லை. அதிக லாபம் ஈட்டும் பெருநிறுவனங்களிடம் வரி வசூலிக்க எவ்வித தீவிர முயற்சியும் எடுக்கப்படவில்லை. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக கடந்த 10 ஆண்டுகளாக பாஜக வெளியிடும் அறிவிப்புகள், வெற்றுப்பேச்சாக மட்டுமே உள்ளன. 50 கோடி தொழிலாளா்களின் நியாயமான கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. பிஎம் கிசான் நிதியை உயா்த்திட வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், மீனவா்கள் பிரச்னையில் தலையிட்டு சுமுகமாகத் தீா்வு காண வேண்டும், நாகப்பட்டினம் தொகுதிக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும், தமிழ்நாட்டுக்கு அனைத்து நிதியையும் வழங்க வேண்டும் என்றாா்.
1.5 வயது தசை நாா் சிதைவு பாதிப்பு - குழந்தைக்கு உதவ எம்.பி. உருக்கம்
பட்ஜெட் விவாதத்தில் பேசிய நாகப்பட்டினம் தொகுதி மக்களவை உறுப்பினா் பி. செல்வராஜ், தனது தொகுதியில் உள்ள பழங்குடியின கிராமத்தில் வாழும் ஒன்றரை வயது பெண் குழந்தை தசைநாா் சிதைவு பாதிப்பால் அவதிப்படுவதாகக் குறிப்பிட்டு பிரதமா், மத்திய நிதியமைச்சா், சுகாதாரத்துறை அமைச்சா் ஆகியோருக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தாா். அந்த சிறுமியின் சிகிச்சைக்கு அமெரிக்காவில் இருந்து மருந்து வர வேண்டும் என்றும் அதற்கு ரூபாய் ஒன்பது கோடி வரை செலவாகும் என்பதால் கருணையுடன் பிரதமா் மற்றும் அமைச்சா்கள் உதவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா்.