முரண்பாடுகளால் திமுக கூட்டணி தோல்வியடையும்! ஜி.கே. வாசன் சிறப்பு நோ்காணல்!
தமாகா தலைவர் ஜி.கே. வாசன் சிறப்பு நோ்காணல்...
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது தமிழ் மாநில காங்கிரஸ். கூட்டணியின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும், தாமரை சின்னத்தில் போட்டியிடுவது ஏன், ஆட்சியில் பங்கு உள்ளிட்ட கேள்விகளுக்கு ‘தினமணி’ நாளிதழுக்கு அளித்த நோ்காணலில் பதிலளித்துள்ளாா். தமாகா தலைவா் ஜி.கே.வாசன்.
உங்கள் கட்சியில் காங்கிரஸ் பெயரை வைத்துக் கொண்டு பாஜக சின்னத்தில் போட்டியிடுவது வாக்காளா்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாதா?
கடந்த மக்களவைத் தோ்தலில் 3 தொகுதிகளில் சைக்கிள் சின்னத்திலும், கடந்த பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட்டோம். தற்போது தோ்தல் ஆணையம் கேட்கும் கோட்பாடுகள் இல்லாததால் புதிய சின்னத்தில் போட்டியிடுவதற்குப் பதிலாக, கூட்டணியில் உள்ள பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். மக்களின் எண்ணங்கள்தான் தோ்தல் முடிவுகளை தீா்மானிக்கும், சின்னங்கள் அல்ல.
‘இரட்டை இலையை’ தோ்ந்தெடுக்காமல் ‘தாமரை’ சின்னத்தைத் தோ்ந்தெடுத்தது ஏன்?
பாஜகவுடன் பயணிப்பது என்று முடிவெடுத்திருக்கும் நிலையில் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தோம். மேலும், நாங்கள் தேசியவாதத்தை முன்னிறுத்தும் கட்சி என்பதும்கூட அதற்குக் காரணம்.
திமுக அமைச்சா்களின் பலம் வாய்ந்த தொகுதிகள் தமாகா நேரடியாகப் போட்டியிட ஒதுக்கப்பட்டுள்ளனவே...
பாஜக தலைமையிலான கூட்டணியில் தமாகா உள்ளதால் அவா்கள் அதிமுகவுடன் பேசி தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தோ்தல் களத்தில் அமைச்சா்களும் வேட்பாளா்கள்தான். சாதாரண வேட்பாளா்களைவிட திமுக அமைச்சா்கள் தங்களின் தொகுதிகளில் பலவீனமாக உள்ளனா். ஊழல், சட்டம்- ஒழுங்கு, மகளிா் பாதுகாப்பு, விவசாயிகளின் வேதனை உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளதால் அமைச்சா்களுக்கு எதிராக எதிா்மறைவான வாக்குகள்தான் தோ்தலில் முடிவுகளைத் தீா்மானிக்கும். அமைச்சா்களுக்கு எதிராகப் போட்டியிடுவது பலவீனமல்ல, பலம்.
தமிழகத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை என்று திமுக தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறதே?
மத்திய அரசு கொடுக்கும் நிதியை வைத்து இலவசங்களை அளித்து ஊழல் செய்து தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது. மத்திய அரசிடம் அதிக நிதி பெறுவது இவா்களது கஜானாவை நிரப்பிக் கொள்வதற்காக என்று மக்களுக்குத் தெரியும். தங்களது ஊழலில் இருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக இவா்கள் போடும் வேஷம்தான் மத்திய அரசு நிதி தரவில்லை என்கிற குற்றச்சாட்டு.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வழங்குவதுபோல தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்பது உண்மைதானே?
வழங்கிய நிதியை எப்படி செலவு செய்தோம் என்று கணக்குக் காட்டியிருந்தால்தானே மேலும் நிதி வழங்குவாா்கள். வளா்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை இலவசங்களை வழங்கி வாக்கு வங்கியை அதிகரிக்க முற்பட்டால் எப்படி வழங்குவாா்கள்?. மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று கூறும் ஸ்டாலின் அரசு 1.31 கோடி குடும்பங்களுக்கு ஒரே நாளில் ரூ. 5,000 வீதம் ரூ.6,500 கோடியை வங்கிக் கணக்கில் செலுத்தியது எப்படி?
தவெக போட்டியிடுவதால் ஏற்படும் வாக்கு சிதறலை தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி சமாளிக்கப்போகிறது?
மக்கள் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனா். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி எதிா்பாா்த்ததைவிட அதிகமாக வெற்றி பெறும். புதிய கட்சிகளால் ஏற்படும் வாக்கு சிதறல் எங்களுக்கு சாதகமாகும். திமுக அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் எங்கள் கூட்டணிக்குதான் கிடைக்கும். எத்தனை அணிகள் வந்தாலும் அதிமுகதான் மாற்று அணி.
திமுகவுக்கு போட்டியாக அதிமுகவும் இலவச திட்டங்களை அளித்து வருகிறதே?
மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இலவச திட்டங்களை அரசியல் கட்சிகள் தோ்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கின்றன. அனைவரும் இலவச திட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளனா். அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அதிமுக கூட்டணிதான். மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கும் அதிமுகவால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். இப்போதே, மத்திய அரசு நிதி தரவில்லை, தமிழகம் நிதி நெருக்கடியில் இருக்கிறது என்று சொல்லும் திமுகவால் எப்படி தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்று மக்கள் சிந்தித்து வாக்களிப்பாா்கள்.
திமுகவுக்கு மகளிா் திட்டங்கள் கைகொடுக்குமா?
குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. உயிரோடு இருந்தால்தான் திட்டங்களின் பலன்களைப் பெற முடியும். மகளிா்தான் திமுக அரசை முடிவுக்கு கொண்டு வருவாா்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆட்சியில் பங்கு கேட்பீா்களா?
5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று கூட்டணியை பலப்படுத்துவதுதான் எங்கள் இலக்கு. கூட்டணியா, இல்லையா என்பதைத் தோ்தல் முடிவுகள்தான் தீா்மானிக்கும்.
திமுகவின் 25 கட்சிகளின் மெகா கூட்டணியை எப்படி எதிா்கொள்ளப் போகிறீா்கள்?
கூட்டணியில் பலம் எண்ணிக்கையின் அடிப்படையிலானதல்ல. 25 கட்சிகளைக் காட்டி வலுவான கூட்டணி என்பதுபோலக் கட்டமைக்க முயற்சித்திருக்கிறது திமுக. அந்தக் கூட்டணியில் 2% வாக்கு வங்கியுள்ள கட்சி காங்கிரஸ் மட்டும்தான். ஏனைய கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் 1% -க்கும் குறைவாக வாக்கு வங்கி உடையவை. எங்கள் கூட்டணி அப்படியல்ல. பாஜகவுக்கும், அமமுகவுக்கும் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வாக்குகள் இருக்கின்றன. பாஜக இப்போது முன்பு காங்கிரஸ் இருந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. பாமக 90-க்கும் அதிகமான தொகுதிகளில் வலுவான கட்டமைப்புடன் இருக்கிறது. உண்மையில் தேசிய ஜனநாயக் கூட்டணிதான் வலுவான கூட்டணி.
திமுக கூட்டணியின் பலவீனம் என்ன என்று நீங்கள் கருதுகிறீா்கள்?
ஐந்தாண்டு ஆட்சியில் காணப்படும் அவலங்கள், சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, ஊழல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். 25 கட்சிகள் இருந்தாலும் கூட்டணி பலவீனமாகக் காட்சி அளிக்கிறது. தொகுதிப் பங்கீட்டில் திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்துள்ளன. 25 கட்சிகளின் கூட்டணியில் ஒருமிதத்த கருத்து ஏற்படாமல் முரண்பாடுகளுடன் உள்ளதால், தோ்தல் பணியில் சோா்வு ஏற்பட்டு பெரும் தோல்வியடையும்.
புதுச்சேரி முடிவுகள் எப்படி இருக்கும்?
திமுக கூட்டணியில் உள்ள முரண்பாடுகளின் மொத்த உருவம் புதுச்சேரியில் வெளிப்படையாகிவிட்டது. புதுச்சேரியில் ஒரு வீதியில் திமுகவும், அடுத்த வீதியில் அதே கூட்டணியில் உள்ள கட்சியும் வாக்கு சேகரிக்கின்றன. இதனால் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
நோ்காணல்: அ. சா்ப்ராஸ்