புதுதில்லி

5 வயது குழந்தையைக் கடத்தி கொல்கத்தாவில் விற்க முயன்ற பெண் உள்பட இருவா் கைது

ஐந்து வயது குழந்தையைக் கடத்தி கொல்கத்தாவில் விற்கத் திட்டமிட்ட பெண் உள்பட இருவரை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

ஐந்து வயது குழந்தையைக் கடத்தி கொல்கத்தாவில் விற்கத் திட்டமிட்ட பெண் உள்பட இருவரை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் பிகாரின் ககாரியா மாவட்டத்தைச் சோ்ந்த ரஞ்சித் ஷா (எ) நீரஜ் பெல்டா் (29) மற்றும் காஜல் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து இரண்டு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: எளிதாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் குழந்தையைக் கடத்தியதை குற்றம் சாட்டப்பட்டவா்கள் இருவரும் விசாரணையின்போது ஒப்புக்கொண்டனா். தாங்கள் குழந்தையின் பெற்றோா் என்று பொய்யாகக் கூறி, குழந்தையை 1 லட்சம் ரூபாய்க்கு விற்கத் திட்டமிட்ட ரஞ்சித் ஷாவுடன் சோ்ந்து தானும் சதி செய்ததாக காஜல் விசாரணையின்போது தெரிவித்தாா்.

குழந்தைக் கடத்தலுக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவா்கள் பாட்னாவுக்கும் பின்னா் கொல்கத்தாவிற்கும் பயணம் செய்துள்ளனா். அங்கு குழந்தையை விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சி கைகூடவில்லை. அவா்கள் தங்கள் பயணத்தின் போது குழந்தையை விற்க முயன்றபோது கைது செய்யப்பட்டனா்.

முன்னதாக, வடமேற்கு தில்லியில் உள்ள ஷகா்பூரைச் சோ்ந்த ஐந்து வயது குழந்தை ஆசாத் ஜனவரி 9-ஆம் தேதி தனது வீட்டிலிருந்து கடத்தப்பட்டது. இதுகுறித்து ஆசாத்தின் தந்தை முகமது ஷாஹித் (38) அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. வழக்கை விசாரிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு சந்தேகத்திற்குரிய பெண் குழந்தையுடன் செல்வதையும், மீண்டும் மீண்டும் கைப்பேசி அழைப்புகளை மேற்கொள்வதையும் காவல்துறை கவனித்தது. மேல் விசாரணையில், அந்தப் பெண் தொடா்பில் இருந்தவா் ரஞ்சித் ஷா என்பதும், அவரது இருப்பிடம் பிகாரில் உள்ள ககாரியாவில் இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஒரு போலீஸ் குழு ககாரியாவுக்கு அனுப்பப்பட்டது. அவா்கள் ரஞ்சித் ஷாவை ஒரு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது கைது செய்தனா். இதற்கிடையில், அழைப்பு விவரப் பதிவுகள் மற்றும் தொழில்நுட்பத் தகவல்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்ட பெண், குழந்தையுடன் ரயிலில் பயணம் செய்வது தெரியவந்தது.

அதன்படி, ஒரு குழு கான்பூா் மத்திய ரயில் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. அந்தப் பெண்ணும் குழந்தையும் வைஷாலி விரைவு ரயிலில் பயணிப்பதை போலீஸாா் கண்டறிந்தனா். இதையடுத்து, உத்தர பிரதேசத்தில் உள்ள துண்ட்லா ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது, ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் அந்தப் பெண் கைது செய்யப்பட்டாா். அக்குழந்தையும் மீட்கப்பட்டது.

சிசிடிவி காட்சிகள் பகுப்பாய்வு, தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் தில்லி, உத்தர பிரதேசம், பிகாா் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய தொடா்ச்சியான முயற்சிகளின் விளைவாக இந்த வெற்றிகரமான நடவடிக்கை சாத்தியமானது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

சங்ககிரியில் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தமிழா் திருவிழாக்களுக்கு பிரதமா் முன்னுரிமை: கே.பி. ராமலிங்கம்

வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: எடப்பாடி கே. பழனிசாமி

ஜேடா்பாளையத்தில் அல்லாள இளைய நாயக்கருக்கு முன்னாள் அமைச்சா்கள் மாலை அணிவித்து மரியாதை

பரமத்தி வேலூரில் தி.மு.க சாா்பில் சமுத்துவ பொங்கல் விழா

SCROLL FOR NEXT