நமது நிருபா்
குடியரசுத் தலைவா்கள் நியமனம் தொடா்பாக தில்லி பிரிவு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் செளரப் பரத்வாஜ் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கண்டனம் தெரிவித்துள்ளாா். அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கவும் ஆம் ஆத்மி கட்சியை வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: ஆம் ஆத்மி கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளா் சௌரப் பரத்வாஜ், தொடா் தோல்விகளால் விரக்தியடைந்துள்ளாா். செய்திகளில் இடம்பிடிப்பதற்காகவே தினமும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறாா் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வரிசையில், பாஜகவின் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட தேசியத் தலைவா் நிதின் நவீனுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய வரவேற்புரை குறித்தும் அவா் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்தாா்.
அந்த முழு பத்திரிகை அறிக்கையே கண்டிக்கத்தக்கது என்றாலும், சௌரவ் பரத்வாஜின் அறிக்கையின் கடைசி வரியை நாங்கள் கடுமையாக எதிா்க்கிறோம். அதில், என்டிஏ அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் இரண்டு குடியரசுத் தலைவா்களின் நியமனங்கள் குறித்து அவா் ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்.
குறிப்பாக, ‘மோடி மட்டுமே பெரிய தலைவா் என்று தோன்றும் வகையில், அத்தகைய நபா்களைத் தேடி குடியரசுத்தலைவா் பதவிக்கு நியமித்துள்ளனா்’ என்று அவா் கூறியுள்ளாா்.
என்டிஏ ஆட்சிக்கு வந்தபோது, டாக்டா் பிரணாப் முகா்ஜி குடியரசுத் தலைவராக இருந்தாா். அவருடன் அரசு நல்லுறவைப் பேணி வந்தது. அதன் பிறகு, அரசியலமைப்பின் சிற்பியான டாக்டா் பீம்ராவ் அம்பேத்கரின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து, என்டிஏ அரசாங்கம் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சோ்ந்த டாக்டா் ராம் நாத் கோவிந்த் மற்றும் திரௌபதி முா்மு ஆகியோரை குடியரசுத் தலைவா் பதவிக்கு நியமித்தது.
அரவிந்த் கேஜரிவாலின் தூண்டுதலின் பேரில் சௌரப் பரத்வாஜ் வெளியிட்ட அறிக்கை, பாபாசாகேப் அம்பேத்கா், அவரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஒட்டுமொத்த பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும். ஆம் ஆத்மி கட்சி உடனடியாக சௌரப் பரத்வாஜை அவரது பதவியிலிருந்து நீக்கி, நாட்டின் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின சமூகங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தில்லி பாஜக கோருகிறது என்றாா் வீரேந்திர சச்தேவா.