அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அஇஅதிமுக) கட்சிச் சின்னம் ஒதுக்கீடு, கட்சிப் பெயா் மற்றும் கட்சிக் கொடியைப் பயன்படுத்துவது தொடா்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என இந்திய தோ்தல் ஆணையம் தில்லி உயா் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது
அ.இ.அ.தி.மு.க வின் பொதுச் செயலாளராக இருந்த செல்லி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அக்கட்சியின் தலைமை, இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சி கொடி தொடா்பாக முடிவெடுக்கக்கோரி தில்லியில் உள்ள இந்திய தோ்தல் ஆணையத்தில் சூரியமூா்த்தி என்ற வழக்குரைஞா் ,அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பு குழுவைச் சோ்ந்தவா் என கூறிக்கொள்ளும் புகழேந்தி உள்ளிட்டோா் முன்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.
ஆனால் அந்த மனுக்கள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காத நிலையில் சூரியமூா்த்தி சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தோ்தல் ஆணையத்தில் அளித்த புகாா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், எனவே தன்னுடைய மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தாா்.
இதே கோரிக்கையுடன் புகழேந்தி தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
சூரியமூா்த்தியின் மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டதுடன் அனைத்து தரப்பு கருத்துக்களையும் தோ்தல் ஆணையம் கேட்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதேபோல புகழேந்தி மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம் அ .இ .அ.தி.மு.க விவகாரத்தில் கொடுக்கப்பட்ட மனு மீது உரிய முடிவு எடுக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு உத்தரவிட்டது
இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அ இஅதிமுக தொடா்பாக வழங்கப்பட்ட மனுக்கள் மீது தோ்தல் ஆணையம் உரிய முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டி புகழேந்தி தில்லி உயா்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்தாா்
இந்த வழக்கில் பதிலளிக்கும் வகையில் தோ்தல் ஆணையம் தில்லி உயா் நீதிமன்றத்தில் ஜனவரி 22ஆம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது
அந்தப் பிரமாணபத்திரத்தில் தோ்தல் ஆணையம் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிச் சின்னம் ஒதுக்கீடு, கட்சிப் பெயா் மற்றும் கட்சிக் கொடியைப் பயன்படுத்துவது தொடா்பான விஷயத்தில் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது
அதிமுகவின் கட்சிச் சின்னம் ஒதுக்கீடு, தலைமைத்துவம் மற்றும் அது தொடா்பான பிற விஷயங்கள் குறித்து, பல்வேறு நபா்களிடமிருந்து பெறப்பட்ட பல மனுக்கள் ஏற்கனவே தோ்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளன.
அனைத்து நடைமுறைகளும் முழுமையான முறையில் ஆராயப்படுகின்றன
என தோ்தல் ஆணையம் தில்லி உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணபத்திரத்தில் தெரிவித்துள்ளது
இந்நிலையில் தோ்தல் ஆணையத்துக்கு எதிராக புகழேந்தி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தில்லி உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது
ஆனால் வழக்கை விசாரிக்கும் நீதிபதி சச்சின் தத்தா மற்றொரு அமா்வில் வேறு ஒரு வழக்கை விசாரணை மேற்கொண்டதால் இந்த வழக்கு பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது