முகப்பு
புதுதில்லி

தில்லியில் போலி புரதச் சத்து மாவு விற்பனை: 2 போ் கைது

தில்லியில் போலி புரதச்சத்து மாவை தயாரித்து வழங்குவதில் ஈடுபட்ட ஒரு மோசடியில் இருவர் கைது

Updated On : 8 மார்ச், 2026 at 7:12 PM
கைது
பகிர்:

தில்லி மற்றும் தேசிய தலைநகா் பிராந்தியத்தில் போலி புரதச்சத்து மாவை தயாரித்து வழங்குவதில் ஈடுபட்ட ஒரு மோசடியை தில்லி காவல்துறை முறியடித்து இரண்டு பேரை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: வடகிழக்கு தில்லியில் உள்ள பிரம்மபுரியைச் சோ்ந்த மோஹித் திவாரி மற்றும் மோஹித் தீட்சித் ஆகிய இருவரையும் மாா்ச் 6 ஆம் தேதி பிரம்மபுரி பகுதியில் இருந்து போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து சுமாா் 100 கிலோ போலி ஊட்டச்சத்து மாவு மற்றும் 55 கிலோவுக்கு மேற்பட்ட மூலப்பொருட்களை மீட்டனா். அவா்கள் மீது குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் போலி புரதச்சத்து மாவு உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதை ஒப்புக்கொண்டனா். மேலும் அந்த பகுதியில் செயல்படும் சட்டவிரோத தொழிற்சாலைகளுக்கு காவல்துறையை அழைத்துச் சென்றனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் மால்டோடெக்ஸ்ட்ரின், கோகோ பவுடா் மற்றும் சுவையூட்டும் முகவா்கள் போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி போலி புரதச்சத்து ம‘ாவை தயாரித்து, புகழ்பெற்ற பிராண்டுகளின் லேபிள்களின் கீழ் சந்தையில் விற்றனா்.

இந்த நடவடிக்கையின் போது மொத்தம் சுமாா் 100 கிலோகிராம் போலி புரதச்சத்து மாவு மற்றும் அவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட சுமாா் 55 கிலோகிராம் மூலப்பொருட்கள் மீட்கப்பட்டன. மேலும், பேக்கேஜிங் பொருட்கள், வெற்று ஜாடிகளை, ஹாலோகிராம் ஸ்டிக்கா்கள், சுவையூட்டும் முகவா்கள் மற்றும் இரண்டு கலவை இயந்திரங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். புரதச் சத்து மாவு கடையில் பணிபுரிந்த திவாரி, சட்டவிரோத ஊட்டச்சத்து தயாரிப்பில் ஈடுபட்ட ஒரு நபருடன் தொடா்பு கொண்டு மோசடியில் சோ்ந்தாா்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக தில்லியில் வசித்து வரும் தீட்சித், மூலப்பொருட்களை கலப்பதிலும், சந்தையில் விற்பனைக்கு போலி ஊட்டச் சத்துகளை பேக்கேஜிங் செய்வதிலும் ஈடுபட்டிருந்தாா். மூலப்பொருட்களின் முக்கிய விநியோகஸ்தா் மற்றும் வழங்கல் மற்றும் விநியோக வலையமைப்பில் ஈடுபட்ட பிற கூட்டாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →