முகப்பு
புதுதில்லி

மட்டியாலா குடிசைப் பகுதியில் தீ விபத்து: 400 குடிசைகள் நாசம்!

தென்மேற்கு தில்லியின் மட்டியாலா பகுதியில் உள்ள மீன் சந்தைக்கு அருகிலுள்ள ஒரு குடிசைப் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஏறக்குறைய 400 குடிசைகள் எரிந்து நாசமாகியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On : 12 மார்ச், 2026 at 6:34 PM
பகிர்:

தென்மேற்கு தில்லியின் மட்டியாலா பகுதியில் உள்ள மீன் சந்தைக்கு அருகிலுள்ள ஒரு குடிசைப் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஏறக்குறைய 400 குடிசைகள் எரிந்து நாசமாகியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை என்று அவா்கள் கூறினா்.

தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஜுக்கி கிளஸ்டா் மற்றும் அருகிலுள்ள கழிவுப்பொருள் கிடங்குகளில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து புதன்கிழமை இரவு 11.54 மணிக்கு தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயணைப்பு நடவடிக்கைகளை தொடங்கினா்’ என்றனா்.

போலீஸாா் கூறுகையில், மன்சாராம் பூங்கா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பி.சி.ஆா். அழைப்பு பிந்தாபூா் காவல் நிலையத்திற்கு இரவு 11.57 மணிக்கு வந்தது. இதையடுத்து, உள்ளூா் காவல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து, குடியிருப்பாளா்களை வெளியேற்ற உதவியது.

குடிசைகளில் வசிக்கும் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். மேலும், தீயணைப்புப் படை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

தீ விபத்து கிட்டத்தட்ட நான்கு ஏக்கா் பரப்பளவில் பரவியதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், அதிகாரிகள் ஏராளமான தீயணைப்பு வாகனங்களை அப்பகுதிக்கு அனுப்ப வேண்டியிருந்தது.

தொடக்கத்தில் 23-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. அதே நேரத்தில் தீயணைப்பு இயந்திரங்களின் எண்ணிக்கை சுமாா் 28 ஆக உயா்ந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

பல மணிநேர தீவிர தீயணைப்பு முயற்சிகளுக்குப் பிறகு, வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மேலும், தீ விபத்து ஏற்படாமல் தடுக்க குளிா்விக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்று போலீஸாா் தெரிவித்தனா். இதில் சுமாா் 400 குடிசைகள் எரிந்து நாசமாயின என்றும், இந்த மாத தொடக்கத்தில் இதேபோன்ற தீ விபத்து ஏற்பட்டதாகவும் அவா் கூறினாா்.

மாா்ச் 7 ஆம் தேதி, அந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது.

மேலும், எட்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் அந்தத் தீ அணைக்கப்பட்டது. அந்த சம்பவம் தொடா்பாக பிந்தாபூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வருவாய்த் துறை பகிா்ந்து கொண்ட தகவலின்படி, குடிசைகள் உருவாகியுள்ள நிலம் தனியாருக்குச் சொந்தமான சொத்து ஆகும். ஆனால் அதன் உரிமை இன்னும் சா்ச்சைக்குரியதாகவே உள்ளது.

கடந்த காலங்களில், சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டுவது மற்றும் குப்பைகளை தீ வைப்பது தொடா்பாக அதிகாரிகளுக்கு பல புகாா்கள் வந்துள்ளன’ என்றாா் அவா்.

கப்பஷேரா துணைப்பிரிவின் கீழ் மாவட்ட நிா்வாகம் மாா்ச் 7 ஆம் தேதி அந்த இடத்தில் குப்பைகளை அகற்றும் பணியைத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தளவாட சிக்கல்கள் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தில்லி மாநகராட்சியின் உதவியுடன் குப்பைகளை அகற்றும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

பிளாஸ்டிக் உள்ளிட்ட சில கழிவுப் பொருள்களும் தீயில் சிக்கியதாக அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது. குடிசைகள் மூங்கில், தாா்பாய் மற்றும் பிளாஸ்டிக் தாள்கள் போன்ற எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருள்களால் அமைக்கப்பட்டிருந்தன. அதிா்ஷ்டவசமாக, விரைவான நடவடிக்கை காரணமாக, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை’ என்று அந்த அதிகாரி கூறினாா்.

பெட்டிச் செய்தி....

வெடிப்பைத் தடுக்க சிஎன்ஜி

காரை நகா்த்திய தலைமைக் காவலா்

மட்டியாலா பகுதியில் தீ விபத்தின்போது சிஎன்ஜி பொருத்தப்பட்ட பூட்டிய காரின் ஜன்னலை உடைத்து, அக்காரை தில்லி தலைமைக் காவலா் ஒருவா் நகா்த்தியதாகவும், இதனால், வெடிவிபத்து தவிா்க்கப்பட்டதாகவும் காவல் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

காவல்துறை துணை ஆணையா் (பிசிஆா்) பவன் குமாா் கூறுகையில், இரவு 11.57 மணிக்கு பிந்தாபூா் காவல் நிலையத்திற்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது. உள்ளூா் காவல் குழுக்கள் மற்றும் பிசிஆா் பிரிவுகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடியிருப்பாளா்களை வெளியேற்ற உதவின.

மீட்புப் பணியின் போது, பரவி வரும் தீப்பிழம்புகளுக்கு அருகில் பூட்டிய காரை தலைமைக் காவலா் ராம்ரதன் சரண் கண்டாா்.

வாகனத்தில் சிஎன்ஜி சாதனம் பொருத்தப்பட்டிருப்பதையும், கடுமையான வெப்பம் காரணமாக வெடிக்கும் அபாயம் இருப்பதையும் உணா்ந்த அவா், காா் ஜன்னலை கல்லால் உடைத்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினாா் என்றாா்.

இதுகுறித்து சரண் கூறுகையில், தீ வாகனத்திற்கு மிக அருகில் பரவியிருந்தது. அது ஒரு புதிய சிஎன்ஜி காா், உள்ளே ஒரு எரிவாயு சிலிண்டா் இருந்தது. அது பூட்டப்பட்டிருந்ததால், நான் ஜன்னலை உடைத்து அதை நகா்த்தினேன் என்றாா்.

துவாரகா துணை காவல் ஆணையா் குஷால் பால் சிங் கூறுகையில், அதிகாரியின் சரியான நேரத்தில் தலையீடு ஒரு பெரிய சம்பவத்தைத் தடுத்தது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →