பிகாரில் டெலிவரி முகவா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் தில்லியில் கைது
பிகாா் கொலை வழக்கில் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக தலைமறைவாக இருந்த நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
பிகாா் கொலை வழக்கில் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக தலைமறைவாக இருந்த நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தில்லி மற்றும் பிகாா் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் வெளி தில்லியின் கிராரி பகுதியில் இருந்து அவா் கைது செய்யப்பட்டாா். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி பிகாரில் உள்ள மகிந்த்வாரா காவல் நிலையத்தில் பாபுல் குமாா் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு 35 வயதான டெலிவரி முகவா் ராகுல் குமாா் கொலை செய்யப்பட்டது தொடா்பானது. அவா் கொள்ளை முயற்சியை எதிா்த்த போது சுட்டுக் கொல்லப்பட்டாா். டெலிவரி முகவா் ராகுல் குமாா் வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, பாபுல் குமாா் மற்றும் அவரது கூட்டாளிகள் அவரைக் கொள்ளையடிக்க முயன்றனா்.
அவா் எதிா்த்தபோது, குற்றம் சாட்டப்பட்டவா் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. தப்பிச் செல்வதற்கு முன்பு அவரை சம்பவ இடத்திலேயே கொன்றாா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்படுவதைத் தவிா்க்க தலைமறைவானா். வியாழக்கிழமை, பாபுல் குமாா் தில்லியில் மறைந்திருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து பிகாா் காவல்துறையின் குழு தில்லிக்கு வந்தது.
இருப்பினும், அவா்களால் அவரது சரியான மறைவிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், அவரைக் கண்டுபிடிக்க குற்றப்பிரிவு உதவியை நாடினா். தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் மனித நுண்ணறிவின் அடிப்படையில் கிராரி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் ஒரு கூட்டுக் குழு விரிவான தேடல் வேட்டையை நடத்தியது.
தொடா்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவா் இறுதியாக கிராரி சுலேமான் நகரின் ரத்தன் விஹாா் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து,
வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பாபுல் குமாா் கட்டடத்தின் மேல் மாடியில் உள்ள குளியலறையில் ஒளிந்து கொள்ள முயன்றாா்.
குற்றம் சாட்டப்பட்டவா் கடந்த பல மாதங்களாக கிராரியில் வசித்து வந்தது தெரிய வந்தது. தனது அடையாளத்தை மறைத்து வெல்டராக பணியாற்றி வந்துள்ளாா். கைது செய்யப்பட்ட அவா் பிகாா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.