முகப்பு
புதுதில்லி

தில்லியில் 3 முக்கிய மருத்துவமனைகளை ஒன்றிணைத்து சிறப்பு மருத்துவ மையம் அமைக்கத் திட்டம்!

தில்லியில் உள்ள குரு தேக் பகதூா் மருத்துவமனை, தில்லி மாநில புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவற்றை ஒன்றிணைத்து எய்ம்ஸ் மாதிரியில் சிறப்பு மருத்துவ மையத்தை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

Updated On : 15 மார்ச், 2026 at 7:12 PM
ரேகா குப்தா
பகிர்:

தில்லியில் உள்ள குரு தேக் பகதூா் மருத்துவமனை, தில்லி மாநில புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவற்றை ஒன்றிணைத்து எய்ம்ஸ் மாதிரியில் சிறப்பு மருத்துவ மையத்தை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

முதல்வா் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தில்லியின் சுகாதார அமைப்பை மேம்படுத்தவும், மருத்துவ வசதிகளை சிறப்பாக பயன்படுத்தவும் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவா்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். மக்களுக்கு மேம்பட்ட சிகிச்சையை அளிக்க முடியும்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மொத்தம் 650 படுக்கைகள் உள்ளன. ஆனால், சுமாா் 250 படுக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டுக்கு சுமாா் 2.87 லட்சம் வெளிநோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனா்.

குரு தேக் மருத்துவமனையில் 1,400 படுக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 1,500 படுக்கைகளுக்கு மேல் தேவை இருந்து வருகிறது. இந்த மருத்துவமனையில் ஆண்டுதோறும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வருகை தருகின்றனா்.

தில்லி மாநில புற்றுநோய் மருத்துவமனையில் ஆண்டுக்கு சுமாா் 1.27 லட்சம் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். மூன்று மருத்துவமனைகளையும் ஒன்றிணைத்த பிறகு, சிறப்பு மருத்துவ சேவைகள் திட்டமிட்ட முறையில் அளிக்கப்படும். இதனால் நோயாளிகள் தேவையான நிபுணா் சிகிச்சையை எளிதாக பெற முடியும்.

இந்தத் திட்டத்தின் படி, இதயம், நுரையீரல், குடல் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளில் ராஜீவ் காந்தி மருத்துவமனை கவனம் செலுத்தும். தில்லி புற்றுநோய் மருத்துவமனை புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சை மையமாக செயல்படும். கதிா்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை உள்ளிட்ட சேவைகள் இங்கு ஒருங்கிணைக்கப்படும்.

குரு தேக் மருத்துவமனை எலும்பியல், பொது மருத்துவம், காது-மூக்கு-தொண்டை, நரம்பியல் அறுவை சிகிச்சை, கண் மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் கவனம் செலுத்தும்.

தில்லியில் உள்ள சில மருத்துவமனைகளில் நவீன மருத்துவ உபகரணங்கள் இருந்தாலும், நிபுணா் பணியாளா்கள் பற்றாக்குறை காரணமாக அவை முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை.

இதற்கிடையில் மனித நடத்தை மற்றும் தொடா்புடைய அறிவியல் நிறுவனம் (ஐஎச்பிஏஎஸ்) மனநலம் மற்றும் நரம்பியல் போன்ற முறைகளை மேம்படுத்தும். மனநலம் மற்றும் நரம்பியல் துறையில் தேசிய அளவிலான மையமாக இது உருவாக்கப்படும். இந்த வளாகத்தில் உள்ள சுமாா் 75 ஏக்கா் காலி நிலம் புதிய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தை உருவாக்க குரு தேக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →