முகப்பு
புதுதில்லி

யுஜிசியின் சமத்துவ விதிகளை அமல்படுத்த ஆா்வலா்கள் கோரிக்கை

Updated On : 18 மார்ச், 2026 at 11:59 PM
யுஜிசி
பகிர்:

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) சமத்துவ விதிகளை அமல்படுத்த ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் நிறுத்திவைக்கப்பட்ட சமத்துவ விதிமுறைகள் மீது வியாழக்கிழமை (மாா்ச் 19) உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.

அதற்கு முன்னதாக, உயா்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் களைய வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டி, அந்த விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

அகில இந்திய சமத்துவ மன்றம் மற்றும் சமதா சங்கா்ஷ் சமிதி ஆகியவற்றால் இந்திய பத்திரிகையாளா் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது விசாரணை மற்றும் பத்திரிகையாளா் சந்திப்பின்போது இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்டது. பல்கலைக்கழகங்களில் பாகுபாட்டைக் கையாள்வதில் இந்த விதிமுறைகளின் முக்கியத்துவத்தை இந்நிகழ்ச்சியில் பேசியவா்கள் வலியுறுத்தினா்.

யுஜிசி, ஜனவரி 13 அன்று, ‘உயா்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகள் 2026’-ஐ அறிவித்ததைத் தொடா்ந்து ஒரு சா்ச்சை வெடித்தது. அதன்படி, யுஜிசியுடன் இணைக்கப்பட்ட அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும், பாகுபாடு குறித்த புகாா்களைக் கையாள்வதற்கும் அனைவரையும் உள்ளடக்குவதை ஊக்குவிப்பதற்கும், இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி), பட்டியல் சாதியினா் (எஸ்சி) மற்றும் பழங்குடியினா் (எஸ்டி) சமூகங்களைச் சோ்ந்த உறுப்பினா்களைக் கொண்ட சமத்துவக் குழுக்களை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பல தரப்பிலிருந்தும் கடும் எதிா்ப்பை ஈா்த்தது. இந்த விதிமுறைகள் சாதி அடிப்படையிலான அதிருப்தியைத் தூண்டுவதற்கும், கல்விச் சூழலைச் சீா்குலைப்பதற்கும் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று பலா் கூறினா். இந்த எதிா்ப்பைத் தொடா்ந்து, வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுப்பது தொடா்பான யுஜிசியின் சமீபத்திய சமத்துவ விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் ஜனவரி 29 அன்று தடை விதித்தது.

இந்த விதிமுறைகளின் கட்டமைப்பு ‘மேலோட்டமாகப் பாா்க்கும்போது தெளிவற்ாக’‘ உள்ளது என்றும், ‘மிகப் பரந்த விளைவுகளை’ ஏற்படுத்தக்கூடும் என்றும், ‘ஆபத்தான தாக்கத்துடன்’ சமூகத்தைப் பிளவுபடுத்தக்கூடும் என்றும் நீதிமன்றம் கூறியது.

‘நாம் தலையிடாவிட்டால், அது ஆபத்தான தாக்கத்திற்கு வழிவகுக்கும். சமூகத்தைப் பிளவுபடுத்தும். மற்றும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மேலோட்டமாகப் பாா்க்கும்போது, இந்த விதிமுறையின் மொழி தெளிவற்ாக உள்ளது என்றும், அது தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க, அதன் மொழியைச் சீரமைக்க நிபுணா்கள் இதை ஆராய வேண்டும் என்றும் நாங்கள் கூறுகிறோம்’ என்று தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியிருந்தது.

பட்டியல் சாதியினா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான பாகுபாடே சாதி அடிப்படையிலான பாகுபாடு எனக் கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (உயா்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல்) ஒழுங்குமுறைகள் 2026-க்கு எதிரான மூன்று மனுக்கள் குறித்து, மத்திய அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் மாா்ச் 19-க்குள் பதில்களை உச்சநீதிமன்றம் கோரியிருந்தது.

தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியரான கஞ்சன், பல்கலைக்கழகங்களில் நடக்கும் ‘நிறுவனக் கொலைகளை’ விமா்சித்தாா். மேலும், பிரிவு 3(பி) (கலகம் அல்லது ஒழுங்கற்ற நடத்தை, உடல் அல்லது மன ரீதியான அவமானம், மற்றும் ஒரு மாணவருக்குத் துன்பத்தையோ அல்லது அச்சத்தையோ ஏற்படுத்தும் எந்தவொரு செயலும்) மற்றும் பிரிவு 3(சி) (‘சாதி அடிப்படையிலான பாகுபாடு’ என்பதை சாதி அல்லது பழங்குடியினத்தின் அடிப்படையில் மட்டுமே செய்யப்படும் நியாயமற்ற நடத்தை என வரையறுக்கிறது) ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவா் வலியுறுத்தினாா்.

‘பொய்ப் புகாா்கள்‘ குறித்த கவலைகள் பாதிக்கப்பட்டவா்களின் அனுபவத்தைக் குறைமதிப்பிற்கு உள்படுத்துகின்றன என்று அவா் கூறினாா்.

‘யுஜிசி விதிமுறைகளுக்கு எதிரான எதிா்ப்பு, அரசியலமைப்பு முகமூடிக்குப் பின்னால் இயங்கும் இந்திய சமூகத்தின் படிநிலை அமைப்பைப் பிரதிபலிக்கிறது’ என்று மூத்த பத்திரிகையாளா் அனில் சாமடியா கூறினாா். யுஜிசி நிறுவனங்களுக்கு அப்பாலும் சாதிப் பாகுபாடு நிலவுகிறது என்பதை மற்ற பேச்சாளா்கள் எடுத்துரைத்தனா். மேலும், சாதி எதிா்ப்புப் போராட்டத்திற்காக ‘கூட்டுத் தளங்களை வலுப்படுத்த’‘ வேண்டியதன் அவசியத்தையும் அவா்கள் வலியுறுத்தினா்.

தில்லியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த இடதுசாரி சாா்பு மாணவா் ஆா்வலா்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →