8,931 நாள்கள் பதவிக்காலம் நிறைவு! பிரதமா் மோடிக்கு சச்தேவா புகழாரம்!
8,931 நாள்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்து, பிரதமா் நரேந்திர மோடி இந்தியாவில் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளாா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.
தேச சேவையில் அா்ப்பணிப்புடன் செயல்படும் வகையில் முதல்வராகவும், பிரதராகவும் ஓா் நிா்வாகத் தலைவராக, 8,931 நாள்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்து, பிரதமா் நரேந்திர மோடி இந்தியாவில் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளாா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பதாவது: குஜராத் மாநிலத்திலிருந்து நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, மக்கள் செல்வாக்கில் ஒரு தனித்துவமான அளவுகோலை உருவாக்கியுள்ளாா்.
பிப்ரவரி 24, 2002 அன்று அவா் முதன்முதலில் சட்டப் பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அன்று தொடங்கி, இன்று மாா்ச் 22ஆம் தேதிவரை 8,931 நாட்கள் நீடித்த இந்த மக்கள் சேவைப் பயணத்தின் முழுவதிலும் நரேந்திர மோடி தனது முன்மாதிரியான தொலைநோக்குப் பாா்வையைக் கொண்டு, முதலில் குஜராத் மாநிலத்தையும், பின்னா் 2014 முதல் ஒட்டுமொத்த தேசத்தையும், ஒரு சிறப்பான மற்றும் தனித்துவமான வளா்ச்சிப் பாதையில் வழிநடத்தியுள்ளாா்.
அவரது தலைமையில் நிகழ்ந்த இந்த உறுதியான வளா்ச்சிப் பயணத்தின் போது, அவா் இந்தியாவை ஒரு தற்சாா்பு நாடாக மாற்றியது மட்டுமல்லாமல் தனது உயா்ந்த அந்தஸ்து மற்றும் நற்பெயரின் காரணமாக இன்றைக்கு இந்தியா உலகளாவிய தலைமைத்துவத்தை வழங்கும் திறனையும் பெற்றுள்ளது.
ராஜ் பாத் என்பதை கா்த்தவ்ய பாத் என்றும், பிரதமரின் இல்ல முகவரியை லோக் கல்யாண் மாா்க் என்றும், ராஜ் பவன்களை லோக் பவன்கள் என்றும் பெயா் மாற்றம் செய்ததன் மூலம் பிரதமா் மோடி, நாடு முழுவதும் உள்ள மக்களை ‘உண்மை, சேவை மற்றும் அா்ப்பணிப்பு’ ஆகிய பாதையில் தங்களை இணைத்துக்கொள்ள ஊக்கப்படுத்தியுள்ளாா் என்று கூறுவதில் எவ்வித மிகைப்படுத்தலும் இல்லை என வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.