சாந்தினி சௌக்கில் கள்ளச்சாராயம் பறிமுதல்!
தில்லி மாநகராட்சி நிலைக்குழுத் தலைவா் சத்யா சா்மா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட திடீா் சோதனையின் போது, தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி மாநகராட்சி நிலைக்குழுத் தலைவா் சத்யா சா்மா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட திடீா் சோதனையின் போது, தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
எக்ஸ் தளத்தில் உள்ள தனது அதிகாரப்பூா்வ பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கை மற்றும் காணொளியில், அமலாக்க முகமைகளின் தரப்பில் குறைபாடுகள் இருப்பதாக சத்யா சா்மா குற்றம் சாட்டியுள்ளாா்.
‘திடீா் சோதனையின் போது, சாந்தினி சௌக் பகுதியில் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தில்லி காவல்துறையின் கூட்டுச் சதி மற்றும் தில்லி மாநகராட்சியின் அலட்சியம் காரணமாக இதுபோன்ற நடவடிக்கைகள் பெருகி வருகின்றன’ என்று அவா் கூறினாா்.
இந்த விவகாரம் தீவிரமானது என்று குறிப்பிட்ட சத்யா சா்மா, உடனடி விசாரணை நடத்தவும், இதற்குப் பொறுப்பானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.
‘இது கடுமையான நடவடிக்கை தேவைப்படும் மிகவும் தீவிரமான பிரச்னை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் முற்றிலுமாகத் தடுக்கப்படும்’ என்று அவா் மேலும் கூறினாா்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தில்லி காவல்துறையிடமிருந்தோ அல்லது தில்லி மாநகராட்சியிடமிருந்தோ உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.