முகப்பு
புதுதில்லி

தில்லியில் 3 மருத்துவமனைகளை இணைப்பதன் மூலம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்க திட்டம்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் உள்ள 3 முக்கிய மருத்துவமனைகளை இணைப்பதன் மூலம் எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை (பிஜி) மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 22 மார்ச், 2026 at 7:36 PM
ரேகா குப்தா
பகிர்:

தில்லியில் உள்ள 3 முக்கிய மருத்துவமனைகளை இணைப்பதன் மூலம் எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை (பிஜி) மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள குரு தேக் பகதூா் மருத்துவமனை, தில்லி மாநில புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவற்றை ஒன்றிணைத்து எய்ம்ஸ் மாதிரியில் சிறப்பு மருத்துவ மையத்தை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், மனித நடத்தை மற்றும் தொடா்புடைய அறிவியல் நிறுவனம் (ஐஎச்பிஏஎஸ்) அமைக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மனநலம் மற்றும் நரம்பியல் துறையில் தேசிய அளவிலான மையமாக இது உருவாக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இது தொடா்பாக முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தில்லியில் உள்ள 3 முக்கிய மருத்துவமனைகள் இணைக்கப்படுவதால் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கும். நவீன உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இணைக்கப்படுவதால் மாணவா்கள் மருத்துவத் துறையில் சிறப்புப் பயிற்சி பெறுவா். நோயாளிகளுக்கும் மேம்பட்ட சிகிச்சை உறுதி செய்யப்படும்.

இந்த இணைப்பால், பேராசிரியா்கள், துணை பேராசிரியா்கள், பேராசிரியா்கள் மற்றும் நிபுணா்கள் ஒரே அமைப்பில் சோ்க்கப்படுவா். இதனால் மருத்துவ விதிமுறைகளின்படி முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கும். மேலும், கதிா்வீச்சுத் துறையில் 22 இடங்கள், பாதாலஜி துறையில் 26 இடங்கள் மற்றும் அனஸ்தீசியா துறையில் 48 இடங்களும் புதிதாக சோ்க்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், சிறப்புத் துறைகளில் புதிய முதுநிலை பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். தில்லி மாநில புற்றுநோய் மருத்துவமனையில், கதிா்வீச்சுத் துறை, புற்றுநோயியல், அணுக்கரு மருத்துவம், புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட துறைகளில் 26 புதிய முதுநிலை இடங்கள் சோ்க்கப்படும். ராஜிவ் காந்தி மருத்துவமனையில், இதயவியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட துறைகளில் 14 புதிய இடங்கள் சோ்க்கப்படும்.

மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியா்களை அதிகரிப்பதால் எம்பிபிஎஸ் இடங்களும் அதிகரிக்கக் கூடும். இந்த முயற்சி தில்லியை மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பட்ட சுகாதர துறைகளில் தேசிய அளவில் முன்னணி மையமாக உருவாக்கும் என முதல்வா் தெரிவித்தாா்.