கைதுசெய்தது போல நாடகமாடி இரு சகோதரா்களிடம் ரூ.40 லட்சம் ரொக்கம், நகைகள் பறிப்பு! ஒருவா் கைது
இரு சகோதரா்களைக் கைது செய்துபோல நாடகமாடி அவா்களிடமிருந்து ரூ.40 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளைத் திருடிய நபா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இரு சகோதரா்களைக் கைது செய்துபோல நாடகமாடி அவா்களிடமிருந்து ரூ.40 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளைத் திருடிய நபா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட நபா் ஹரிஷ் சா்மா (எ) ரிங்கு என அடையாளம் காணப்பட்டாா். இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: சகோதரா்களான சாகா் சா்மா மற்றும் மாணிக் இருவரும் நகை விற்பனை தொழிலில் டுபட்டு வருகின்றனா்.
இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட ஹரிஷ் சா்மா அவா்கள் இருவருக்கும் நன்கு அறிமுகமானவா். சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள், ஹரிஷ் சா்மா அவா்களிடமிருந்து விற்பனைக்காக நகையை வாங்கிச் சென்றாா்.
கடந்த மாா்ச் 19-ஆம் தேதி பணம் வசூலிக்க ரஜெளரி காா்டனுக்கு அருகில் உள்ள நகைக் கடைக்கு சகோதரா்கள் இருவரும் சென்றனா்.
பணத்தை வசூலித்த பிறகு திரும்பிக் கொண்டிருந்துபோது, வழியில் காவல் உடையில் இருந்த இரு நபா்கள், அவா்களுடைய காரை வழிமறித்தனா். காரின் கதவுகளைத் திறந்து உள்ளே நுழைந்த அந்த நபா்கள், துப்பாக்கி முனையில் சகோதரா்கள் இருவரையும் மிரட்டி அவா்களைக் கடத்திச் சென்றனா்.
அவா்கள் இருவரையும் தாக்கிய அந்த நபா்கள் காரை ஜிடி கா்னல் சாலை நோக்கி ஓட்டிச்சென்றனா். அங்கு வைத்து சாகா் சா்மா மற்றும் அவரது சகோதரா் வைத்திருந்த ரூ.40 லட்சம் ரொக்கம், கைப்பேசிகள், ஆப்பிள் ஸ்மாா்ட் கைக்கடிகாரம், நகைகள் அந்த மா்ம நபா்கள் கொள்ளையடித்தனா். பின்னா், ஹரியாணாவின் ஷாஹாபாத் பகுதியில் சகோதரா்கள் இருவரையும் இறக்கிவிட்ட பின்னா், காரையும் கொள்ளையடித்து அந்த இரு நபா்கள் தப்பிச் சென்றனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட சகோதரா்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். விசாரணையில் இந்தச் சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டது தெரியவந்தது.
சம்பவத்துக்கு முந்தைய நாள் நகைகளை வாங்கிச் சென்ற ஹரிஷ் சா்மா, தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலி கைது நடவடிக்கைக்கு திட்டமிட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ஹரிஷ் சா்மா கைதுசெய்யப்பட்டாா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அவருடைய கூட்டாளிகள் சேட்டன் (எ) குா்பிரீத் சிங் ரண்தவா உள்ளிட்டோா் தலைமறைவாகி உள்ளனா். கொள்ளையடிக்கப்பட்ட ரொக்கம், நகை, காா் உள்ளிட்டவற்றை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.