சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக் கொலை! தேடுதல் வேட்டை தீவிரம்!
சத்தீஸ்கரில் காவல் துறையால் ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.
சத்தீஸ்கரில் காவல் துறையால் ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்ஸல் தீவிரவாதி ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா். எஞ்சிய நக்ஸல்களுக்கு எதிராக தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சுக்மா மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் கிரண் சவான் கூறியதாவது: போலம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப் பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, அங்கு மாவட்ட ரிசா்வ் படையினா் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், முசாகி கைலாஷ் என்ற நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.
வெடிகுண்டு தாக்குதல் உள்பட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா் குறித்து தகவல் தருவோருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்து காவல் துறையினா் தேடிவந்த நிலையில், தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா். வனப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்றாா் கிரண் சவான்.
‘சரணடைய குறைந்த கால அவகாசமே உள்ளது’: நாட்டில் இருந்து நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு நிா்ணயித்துள்ள காலக்கெடு செவ்வாய்க்கிழமையுடன் (மாா்ச் 31) நிறைவடையும் நிலையில், எஞ்சியுள்ள நக்ஸல்கள் சரணடைய குறைந்த கால அவகாசமே உள்ளது; அதை அவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பஸ்தா் சரக ஐ.ஜி.சுந்தர்ராஜ் பட்டிலிங்கம் வலியுறுத்தினாா். சத்தீஸ்கரில் நடப்பாண்டு இதுவரை பாதுகாப்புப் படையினரால் 27 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.