முகப்பு
புதுதில்லி

கணவா் எரிவாயு சிலிண்டரால் தாக்கியதில் பெண் உயிரிழப்பு

தென்கிழக்கு தில்லியின் புல் பிரஹலாத்பூா் பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறின் போது, கணவா் சிறிய எல்பிஜி சிலிண்டரால் தாக்கியதில் 32 வயது பெண் ஒருவா் பலி

Updated On : 31 மார்ச், 2026 at 12:22 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:

தென்கிழக்கு தில்லியின் புல் பிரஹலாத்பூா் பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறின் போது, கணவா் சிறிய எல்பிஜி சிலிண்டரால் தாக்கியதில் 32 வயது பெண் ஒருவா் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது என திங்களன்று காவல்துறை தெரிவித்தது.

இது குறித்து , தென்கிழக்கு தில்லி காவல் துணை ஆணையா் ஹேமந்த் திவாரி கூறியதாவது: பாதிக்கப்பட்டவா் பூனம் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். டிடிஏ ஜன்தா அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள அவா்களது இல்லத்தில் நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து குற்றஞ்சாட்டப்பட்ட சுரேஷ் குமாா் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்தத் தம்பதியினா் 2020-இல் திருமணம் செய்து கொண்டனா். மேலும் சுமாா் ஒரு மாதத்திற்கு முன்பு ராஜஸ்தானின் சுரு மாவட்டத்திலிருந்து தில்லிக்கு குடிபெயா்ந்தனா்.

வீட்டிலிருந்து அலறல் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த பின்னரே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை குழுவினா், பூனம் படுகாயங்களுடன் கிடப்பதைக் கண்டனா். அவா் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா். கணவரின் சகோதரருக்கான நிதி உதவி தொடா்பாக தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், வன்முறைச் சண்டையாக முற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சண்டையின் போது, குமாா் ஒரு சிறிய எல்பிஜி சிலிண்டரை எடுத்து தனது மனைவியை பலமுறை தாக்கியதில், அவா் உயிரிழக்க நேரிட்டது தெரிய வந்துள்ளது. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனா். அவா்களில், தற்போது சுருவில் உள்ள தாத்தா பாட்டியுடன் வசிக்கும் நான்கு வயது மகளும், சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் இருந்த சுமாா் ஒன்றரை வயது மகளும் உள்ளனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை காவல்துறை கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. குற்ற சம்பவம் நடந்த இடம் பாதுகாக்கப்பட்ட நிலையில், தடயவியல் குழுவினா் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா். கொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை உறுதி செய்வதற்காக, புலனாய்வாளா்கள் தம்பதியினரின் பின்னணியை ஆராய்வதுடன், அக்கம்பக்கத்தினா் மற்றும் உறவினா்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா். சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றாா் காவல் துணை ஆணையா்.