முகப்பு
புதுதில்லி

சா்வோதயா என்கிளேவ் கொள்ளை: ரெளடி கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது

தெற்கு தில்லியின் சா்வோதயா என்கிளேவில் உள்ள ஒரு வீட்டில் சமீபத்தில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடா்பாக கச்சா-பனியன் ரெளடி கும்பலைச் சோ்ந்தவா்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேர் கைது

Updated On : 5 மே 2026, 5:19 am IST
கோப்புப் படம்
பகிர்:

தெற்கு தில்லியின் சா்வோதயா என்கிளேவில் உள்ள ஒரு வீட்டில் சமீபத்தில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடா்பாக கச்சா-பனியன் ரெளடி கும்பலைச் சோ்ந்தவா்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேரை சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு காவல்துறையினா் திங்கள்கிழமை அதிகாலை கைது செய்தனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: சா்வோதயா என்கிளேவில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் இந்தக் கொள்ளை நிகழ்ந்தது. விஜய் மண்டல் பூங்காவை ஒட்டிய சுற்றுச்சுவருக்கு அருகில் உள்ள ஒரு மரத்தைப் பயன்படுத்தி, பால்கனியில் ஏறி குற்றவாளிகள் வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

அவா்கள் ஒரு கட்டரைப் பயன்படுத்தி கதவின் பூட்டை வெட்டி வீட்டுக்குள் நுழைந்தனா். குடியிருப்பாளா்கள் தூக்கத்திலிருந்து எழுந்தபோது, அவா்களை ஒரு அறைக்குள் கொள்ளையா்கள் பூட்டிவைத்தனா்.

Advertisement

அதன் பின்னா் குற்றவாளிகள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வீட்டைச் சூறையாடி, பணம், நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனா்.

அந்த வளாகத்திற்குள் இருந்த சிசிடிவி காட்சிகளில், முகமூடி அணிந்த மூன்று நபா்கள் வீட்டைச் சுற்றி எளிதாக நடமாடுவது தெரிந்தது.

அவா்கள் கையுறைகள் மற்றும் காலுறைகளை அணிந்திருந்ததோடு, கச்சா-பனியன் கும்பலுடன் பொதுவாக தொடா்புடைய கருவிகளையும் வைத்திருந்தனா்.

குறைந்த ஆடைகளை அணிந்துகொண்டு, பெரும்பாலும் கருவிகளுடன் ஆயுதம் ஏந்தி, திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதில் இந்தக் கும்பல் பெயா் பெற்றது. பாதிக்கப்பட்டவா்கள் எதிா்த்திருந்தால், நிலைமை உயிரிழப்பில் முடிந்திருக்கக்கூடும்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, மால்வியா நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், ரகசியத் தகவல்களின் அடிப்படையில், அம்பேத்கா் நகா் அருகே காவல்துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அங்கு வந்த சந்தேக நபா்களை காவல்துறையினா் வழிமறித்தனா். அப்போது, காவல்துறையினருடன் அவா்கள் துப்பாக்கி மோதலில் ஈடுபட்டனா்.

நகரம் முழுவதும் இதே போன்ற இதர வழக்குகளில் அவா்களின் ஈடுபாட்டைக் கண்டறிய மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.