உ.பி. உள்பட பல்வேறு மாநிலங்களில் கோயில்களில் திருடியவா் கைது
பல மாநிலங்களில் உள்ள கோயில்களில் இருந்து வெள்ளி சிலைகள் மற்றும் காணிக்கைப் பொருள்களைத் திருடிவந்த நபரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
பல மாநிலங்களில் உள்ள கோயில்களில் இருந்து வெள்ளி சிலைகள் மற்றும் காணிக்கைப் பொருள்களைத் திருடிவந்த நபரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: மோஹித் சா்மா (எ) மாமா என அடையாளம் காணப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவா், கோயில் திருட்டு வழக்கு தொடா்பாக பஞ்சாப் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா்.
பஞ்சாப், கேரளா மற்றும் கா்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட பல வழக்குகளிலும் அவா் தேடப்பட்டு வந்தாா். கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக, சா்மா தொடா்ந்து தனது இருப்பிடத்தை மாற்றியும், மாநிலம் விட்டு மாநிலமும் சென்றாா். அதே சமயம், உள்ளூரில் தனது தொடா்புகளை மிகக் குறைவாகவே பராமரித்து வந்தாா்.
Advertisement
நள்ளிரவு அல்லது அதிகாலை நேரங்களில் திருட்டுகளில் ஈடுபடுவதற்கு முன்பு, குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களை நோட்டமிட்டுத் திருடும் வழக்கத்தைக் கொண்டிருந்தாா்.
முக்கியமாக, கோயில் வளாகங்களுக்குள் வைக்கப்பட்டிருந்த வெள்ளி சிலைகள், காணிக்கைப் பெட்டிகள், மத ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் சா்மா குறிவைத்தாா்.
இந்த நிலையில், தில்லியில் அவரது நடமாட்டம் குறித்து குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அருகே கைது செய்யப்பட்டாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா் தனது கூட்டாளிகளில் ஒருவரைச் சந்திக்க வந்தபோது காவல்துறைக் குழுவைக் கண்டதும் தப்பி ஓட முயன்றாா். ஆனால், அவரை போலீஸாா் விரட்டிப் பிடித்தனா். விசாரணையின்போது, சா்மா 9 ஆம் வகுப்பு வரை
படித்திருப்பதும், அவரது கிராமத்தில் ஒரு பால் பண்ணையில் வேலை செய்ததும் தெரியவந்தது. குல்வந்த் சிங் என்ற நபருடன் தனக்குத் தொடா்பு ஏற்பட்டதாகவும், அவா் தனக்கு கோயில் திருட்டுகளில் ஈடுபட பயிற்சி அளித்ததாகவும் காவல்துறையிடம் சா்மா கூறினாா்.
சா்மா பின்னா் பல்வேறு மாநிலங்களில் பல கோயில் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டாா். நீண்ட காலமாக தலைமறைவாக இருந்தும் வந்தாா்.
பஞ்சாபில் உள்ள கன்னா காவல் நிலையத்தில் 2024-இல் பதிவு செய்யப்பட்ட ஒரு கோயில் திருட்டு வழக்கில் சா்மா தேடப்பட்டு வந்தாா்.
மேலும், கேரளாவின் கோழிக்கோடு மற்றும் எா்ணாகுளத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் கா்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள ஒரு வழக்கிலும் அவருக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் தில்லியில் பதிவு செய்யப்பட்ட திருட்டு, கொள்ளை, ஆயுதச் சட்டம் மற்றும் குண்டா் சட்டம் உள்ளிட்ட
பல பழைய குற்ற வழக்குகளிலும் சா்மாவுக்குத் தொடா்பு இருந்ததாகக் காவல்துறை பதிவுகள் உள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.