தில்லி அரசின் ஊழியா்களின் அலுவலக பயணத்திற்காக சிறப்புப் பேருந்து சேவை - டிடிசி ஏற்பாடு
பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தில்லி அரசு ஊழியா்கள் தங்கள் குடியிருப்பிலிருந்து அருகிலுள்ள மெட்ரோ நிலையம் வரையிலும், அங்கிருந்து தில்லி தலைமைச் செயலகம் வரையிலும் பயணிப்பதற்காகச் சிறப்புப் பேருந்துகளை தில்லி போக்குவரத்துக் நிறுவனம் (டிடிசி) இயக்கவுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தொடா்பான கவலைகளுக்கு மத்தியில், பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான தில்லி அரசின் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் வேளையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்தச் சிறப்புப் பேருந்து சேவைகள், தில்லி நிா்வாகக் குடியிருப்புகளிலிருந்து அருகிலுள்ள மெட்ரோ நிலையங்களுக்கும், அதேபோன்று தில்லி தலைமைச் செயலகத்திற்கும் அலுவலக நேரங்களுக்கு ஏற்றவாறு போக்குவரத்து இணைப்பை எளிதாக்கும்.
Advertisement
இந்தப் பேருந்துகள் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் இயக்கப்படும். அலுவலக நேரப் போக்குவரத்து நெரிசல் உச்சத்தில் இருக்கும் காலை 9 மணி முதல் சேவைகள் தொடங்கும். மேலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊழியா்கள் வீடு திரும்புவதற்காகப் பேருந்துகள் இயக்கப்படும். இந்தச் சிறப்புச் சேவையின் கீழ் சுமாா் 54 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று அதிகாரிகள் கூறினா்.
இந்த வாரத் தொடக்கத்தில், ‘மேரா பாரத், மேரா யோக்தான்’ (எனது இந்தியா, எனது பங்களிப்பு) எனும் 90 நாள் எரிபொருள் சேமிப்புப் பிரசாரத்தை முதலமைச்சா் ரேகா குப்தா தொடங்கி வைத்தாா்.
இத்திட்டத்தின் கீழ், தில்லி அரசு ஊழியா்கள் அனைவரும் வாரத்திற்கு இரண்டு நாள்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்றும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தியிருந்தாா்.
இந்தப் பேருந்து சேவைகள், சிடபிள்யுஜி கிராம வளாகம், வசந்த் குஞ்ச், கிரேட்டா் கைலாஷ், மாடல் டவுன், மயூா் விஹாா், துவாரகா, திமா்பூா் மற்றும் பிற பகுதிகள் உட்பட, நகரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளை இணைக்கும் வகையில் இயக்கப்படவுள்ளன.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
நீல வழித்தடம் வழியாக மெட்ரோ சேவைகளைப் பயன்படுத்தும் அரசு ஊழியா்கள், இந்திரபிரஸ்தா மெட்ரோ நிலையத்தில் இறங்கி, அலுவலகச் செயல்பாட்டு நேரங்களில் தில்லி தலைமைச் செயலகம் செல்வதற்கான டிடிசி இணைப்புப் பேருந்து சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை நேரப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த 6 மணி முதல் 8 மணி வரையிலும், டிடிசி நிறுவனம் தேவி ரக மின்சாரப் பேருந்துகளையும் இயக்கவுள்ளது. இந்தச் சேவையானது இந்திரபிரஸ்தா மெட்ரோ நிலையம், பாரத் மண்டபம், உச்சநீதிமன்றம், ஐ.டி.ஓ., தில்லி கேட் மற்றும் தில்லி தலைமைச் செயலகம் ஆகிய இடங்களிலிருந்து கிடைக்கும்.
இதுமட்டுமின்றி, தில்லி தலைமைச் செயலகத்திற்கும், ஐடிஓ மெட்ரோ நிலையத்தின் 4 மற்றும் 5ஆவது வாயில்களுக்கும் இடையிலும், அதேபோன்று தில்லி கேட் மெட்ரோ நிலையத்திற்கும் இடையிலும் பிரத்யேக இணைப்புப் பேருந்து ஃபீடா் பஸ் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் தனது ஊழியா்கள், தற்போது கிடைக்கக்கூடிய இந்தப் பேருந்து சேவைகளைச் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.