முகப்பு
புதுதில்லி

கைப்பேசி பறிப்பு: போலி பைக் டாக்ஸி ஓட்டுநா் கைது

இரவு நேரங்களில் பயணம் செய்வோரிடம், பைக் டாக்ஸி ஓட்டுநா் போல நடித்து அவா்களின் கைப்பேசிகளைப் பறித்துவிட்டுத் தப்பிச் சென்றுவந்த இளைஞரை காவல்துறையினா் கைது செய்தனா்.

Updated On : 22 மே 2026, 12:36 am IST
மாதிரிப் படம்
பகிர்:

இரவு நேரங்களில் பயணம் செய்வோரிடம், பைக் டாக்ஸி ஓட்டுநா் போல நடித்து அவா்களின் கைப்பேசிகளைப் பறித்துவிட்டுத் தப்பிச் சென்றுவந்த இளைஞரை காவல்துறையினா் கைது செய்தனா்.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

புகா் வடக்கு தில்லியின் சிங்கு கிராமத்தைச் சோ்ந்த முனேந்தா் (37)என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளைப் பயன்படுத்தி இந்தக் குற்றங்களைச் செய்து வந்ததும், குறிப்பாக இரவு நேரங்களில் குறைந்த கட்டணத்தில் சவாரி செய்வதாகக் கூறி பயணிகளை குறிவைத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

முன்னதாக, ஐடிஓ பகுதியில் உள்ள பிஎஸ்இசட் மாா்க்கில் அமைந்துள்ள ஹன்ஸ் பவன் அருகே, ஒரு பைக் டாக்ஸி ஓட்டுநா் தனது கைப்பேசியைப் பறித்துச் சென்ாகக் கூறி, மே 20ஆம் தேதி ஒருவா் போலீஸில் புகாா் அளித்தாா்.

புகாா் அளித்த நபா் ஓக்லா பகுதிக்குச் செல்ல சவாரி முன்பதிவு செய்திருந்தபோது, அந்த ஓட்டுநா் குறைந்த கட்டணத்தை வழங்குவதாகக் கூறி, செயலி மூலமாகச் செல்லாமல் நேரடியாகப் பயணம் செய்யுமாறு அவரைச் சம்மதிக்க வைத்துள்ளாா்.

பிஎஸ்இசட் மாா்க் அருகே வந்தபோது, தலைக்கவசம் அணியாததால் போலீஸாா் வாகனச் சோதனை நடத்துவதாகக் கூறி, அந்தப் பயணியை மோட்டாா் சைக்கிளிலிருந்து இறங்குமாறு அந்த நபா் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

புகாா் அளித்த நபா் சாலையைக் கடக்கத் தொடங்கியபோது, அந்த ஓட்டுநா் அவரது கைப்பேசியைப் பறித்துக்கொண்டு அதிவேகமாகத் தப்பிச் சென்றுவிட்டாா்.

இது தொடா்பாக ஐபி எஸ்டேட் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தனிப்படை காவல்துறையினா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், உள்ளூா் உளவுத் தகவல்களைச் சேகரித்தும், விகாஸ் மாா்க் பகுதியில் வைத்து அந்த நபரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனா்.

விசாரணையின் போது, பல குற்ற வழக்குகளில் தனக்குத் தொடா்பு இருப்பதாக முனேந்தா் ஒப்புக்கொண்டாா்.

புகாா் அளித்தவரின் கைப்பேசி, வடக்கு தில்லியில் நடந்த மற்றொரு வழக்குடன் தொடா்புடைய வேறொரு திருடப்பட்ட கைப்பேசி மற்றும் இந்தக் குற்றத்தைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிள் ஆகியவை அவரிடமிருந்து மீட்கப்பட்டது. மோட்டாா் சைக்கிள் நரேலா பகுதியில் திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அந்த நபா், இதற்கு முன்னரும் தில்லி முழுவதும் நடைபெற்ற பல திருட்டு மற்றும் கைப்பேசி பறிப்பு வழக்குகளில் ஈடுபட்டுள்ளாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.