முகப்பு
நூல் அரங்கம்

சொற்றுணை வேதியர் பேராசிரியர் எச்.வேங்கடராமன் வாழ்வும் தமிழ்த் தொண்டும்

சொற்றுணை வேதியர் பேராசிரியர் எச்.வேங்கடராமன் வாழ்வும் தமிழ்த் தொண்டும் - பதிப்பாசிரியர்: தி.வெ.விஜயலட்சுமி; பக்.256; ரூ.200; மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை -108.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:10 AM
பகிர்:

சொற்றுணை வேதியர் பேராசிரியர் எச்.வேங்கடராமன் வாழ்வும் தமிழ்த் தொண்டும் - பதிப்பாசிரியர்: தி.வெ.விஜயலட்சுமி; பக்.256; ரூ.200; மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை -108.

தஞ்சை மாவட்டம் திருவையாறில் 1919 இல் பிறந்தவர் எச்.வேங்கடராமன். சென்னை பல்கலைக்கழக வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தருமபுர ஆதீன நிலையத்தில் தினமும் மாலையில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை இலவசமாகக் கற்பித்து வந்தார். மேலும் அகில இந்திய வானொலியிலும் அடிக்கடி உரையாற்றி வந்தார்.

தமிழ்த்தாத்தா உ.வே.சா. தனது வாழ்நாளில் செய்ய நினைத்து செய்ய இயலாமல் போன பணி, நற்றிணைக்கு உரை எழுத வேண்டுமென்பது. அப்பணியை எச்.வேங்கடராமன் மேற்கொள்ள விழைந்தார். சென்னையிலுள்ள உ.வே.சா. நூலகம் சென்று அங்கிருந்த சுவடிகள், உ.வே.சா.வின் கையெழுத்துப் பிரதிகள், ஒப்புமைப் பகுதிகள் ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு வந்து, நற்றிணையின் ஒவ்வொரு பாடலுக்கும் பதவுரை, கருத்துரை, வினைமுடிபு, ஒப்புமை, விளக்கம் எழுதி நூலாக வெளியிட்டார்.

தமிழிலக்கியம், இலக்கணம், வரலாறு, கல்வெட்டு போன்ற துறைகளில் நுண்மான் நுழைபுலம் மிக்கவர். கல்லூரி முதல்வர்களும் பேராசிரியர்களும் தமது பெயருடன் சாதிப் பெயரையும் இணைத்துக் கொள்வது மரபாக இருந்த அக்காலத்திலேயே தம் பெயருடன் சாதிப் பெயரை இணைத்துக் கொள்ள மறுத்த பண்பாளர்.

இந்நூலில் எச்.வேங்கடராமனின் குடும்பத்தினரும், அவருடைய நண்பர்களும், அவரது மாணாக்கர்களாகிய ஏராளமான கல்வியாளர்கள், முனைவர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், துணை வேந்தர்கள் ஆகியோர் அவரது நினைவுகளை இந்நூலில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

எச்.வேங்கடராமன் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் உ.வே.சா. விட்டுச் சென்ற ஓலைச் சுவடிகளில் சிலவாவது நூல் வடிவம் பெற்றிருக்கும். அது நிறைவேறாமல் போனது தமிழர்களின் தவக்குறைவே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.