காடெனும் வரம்
காடெனும் வரம் - ஹேமலதா; பக்கம் 193; ரூ.249; நோஷன் பிரஸ்.காம்.
காட்டுயிர்களைப் பற்றியும், வனங்களைப் பற்றியும் பல நூறு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும், அது தொடர்பான புதிய புத்தகம் ஒன்று வந்தால் கட்டாயம் கவன ஈர்ப்பு பெறும் என்பதை தமிழக வனத் துறை அதிகாரி ஹேமலதா எழுதியுள்ள இந்த நூல் உறுதி செய்துள்ளது.
சிங்கம், புலி, யானை தொடங்கி பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி வரை 30 உயிரினங்கள் குறித்து இதில் பேசப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் உயிரினம் குறித்தும் மிகச் சிறிய அளவிலான கட்டுரைகளே இடம்பெற்றிருந்தாலும், அதில் அறியப்படாத தகவல்கள் ஏராளம் நிறைந்துள்ளன.
மனிதர்களைப் போலவே குடும்பமாகவும், கூட்டமாகவும் வாழும் சிங்கங்கள், வனத்தில் பிற உயிர்களின் இருப்பை தீர்மானிக்கும் ஆதார விலங்காக உள்ளதாகக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
யானைகளின் வயிற்றில் உள்ள உணவில்10 சதவீதம் விதைகள் உள்ளதையும், அவற்றை கழிவாக வெளியேற்றுவதன் மூலம் நாளொன்றுக்கு குறைந்தது 100 மரங்களை யானைகள் நட்டுச் செல்வதையும் கூறியிருப்பது வியப்புக்குரிய தகவல்.
உலகில் 18 ஆயிரம் வகை பட்டாம்பூச்சிகள் உள்ளதாகக் கூறும் நூலாசிரியர், தமிழ் மறவன் எனப்படும் தமிழக வகை பட்டாம்பூச்சியின் உயிர்ச் சூழல் முக்கியத்துவத்தை விரிவாக
எடுத்துரைத்துள்ளார்.
குரங்குகளைப் பொருத்தவரை அதன் இனக்குழுவுக்கு தலைவனாக உள்ள ஓர் ஆண் குரங்கு, விரும்பிய இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளதாம். சமிக்ஞைகள், ஒலிகள் மூலமாக தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் குரங்குகளுக்கு இடையே தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கு அதீத போட்டி தினமும் நிலவும் என்ற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது.
இப்படியாக மிக நுட்பமான தகவல்களுடன் வெளிவந்துள்ள இந்நூல் காட்டுயிர் வரிசையில் மேலும் ஒரு நன்னூல்.