வாழ்வில் வளம்பெற வள்ளுவம்
வாழ்வில் வளம்பெற வள்ளுவம் - இரா. பூரணலிங்கம்; பக். 320; ரூ. 400; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை -50; 044 - 26251968.
இந்திய ஆட்சிப் பணியில் 35 ஆண்டுகள் பணியாற்றி, 2005-இல் மத்திய அரசு செயலராக ஓய்வு பெற்றவர் நூலாசிரியர். 2020 வரை உலக வங்கியின் மருத்துவத் துறை ஆலோசகராகவும் பணியாற்றிய அவரால்தான் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் தொடங்கப்பட்டது.
கரோனா பொதுமுடக்கக் காலத்தில் அறிவுத் தளத்தில் பல நன்மைகள் விளைந்துள்ளன. அவ்வகையில், தமிழ் இலக்கியங்களைத் தொடர்ந்து, திருக்குறளைப் படிக்கிறார்; நண்பர்களுடன் விவாதிக்கிறார் நூலாசிரியர். திருக்குறளின் மேன்மையில் மூழ்கியவர், 'வாழ்வின் அடிப்படை ஆதாரங்களை விளக்கிடும் அனைத்து சமயங்களும் சாதிகளும் சொந்தம் கொண்டாட விரும்பும் நூல் திருக்குறள்' எனக் குறிப்பிட்டு உரை எழுதத் தொடங்குகிறார்.
அறத்துப்பாலில் 37 குறள்கள், பொருட்பாலில் 63 குறள்கள் என நூறு குறள்களுக்கான விளக்கத்தை எளிய முறையில், தற்காலத்துக்குப் பொருந்தும் கருத்தின் அடிப்படையிலும் தன் அனுபவத்தின் அடிப்படையிலும் குறுங்கட்டுரைகளாகவே எழுதியுள்ளார். குறளையும் அதற்கான அருஞ்சொற்பொருள், பொருள், குறள் விளக்கத்தைத் தந்து நிறைவாக ரத்தினச் சுருக்கமான கருத்தையும் குறிப்பிடுகிறார்.
தொடக்கத்திலேயே, 'அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு' என்கிற குறளை விளக்கும்போது, அரசனைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் வள்ளுவரின் கருத்துகளை நன்கறிந்து செயல்பட வேண்டும், அப்போதுதான் ஆட்சி மேம்படும், என்கிறபோது இன்றைய நிலைமைகளுக்கேற்ப பொருள்கொள்வது துலங்குகிறது.
பலரும் எழுதிய பெரும்பாலான உரைகளைப் படித்துணர்ந்த நூலாசிரியர், தக்க இடங்களில் அவர்களின் கருத்துகளையும் தெரிவிக்கிறார். "கற்றதனால் ஆய...' எனும் குறளுக்கு விளக்கம் கூறும்போது நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையை மேற்கோள் காட்டுகிறார்.
எழுதியது நூலாசிரியரின் அனுபவம் என்றால், நூலின்வழி, அதன் பிழிசாற்றைப் படிப்பது வாசகர்களுக்குக் கிடைக்கும் பேரனுபவம்.