புதுமைப்பித்தன் (தேர்ந்தெடுத்த கதைகள்)
புதுமைப்பித்தன் (தேர்ந்தெடுத்த கதைகள்); தொகுப்பாசிரியர் ஹவி; பக்.: 136; ரூ. 177; வானவில் புத்தகாலயம்; சென்னை-17; ✆ 044-29860070
புதுமைப்பித்தனின் கதைகள் தனித்துவமான, பரிசோதனை ரீதியிலான புதிய பாணிகளைக் கொண்டவை. 'மிஸ்டிக்' எனப்படும் பூடகத்தன்மை கொண்ட கதைகளை புராணங்களிலிருந்தும், தொன்மங்களிலிருந்தும் எடுத்துக்கொண்டு அவர் படைத்த 10 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
திருவிளையாடல் புராணத்தின் பின்னணியில் 'அன்று இரவு', ராமாயண பின்னணியில் 'சாப விமோசனம்', கபாடபுரம் ஆகிய கதைகள் மாறுபட்ட அணுகுமுறைகளுடன் கூடிய கதையாடலைக் கொண்டவை.
'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' கதையில், ஹோட்டலுக்குள் கடவுளுக்கும் கந்தசாமிப் பிள்ளைக்கும் இடையேயான உரையாடல்கள் நகைச்சுவை ரசம்.
'புதிய கந்த புராணம்' கதையில், 'தாமிரவருணி நதி எப்போதும் வற்றாது என்பது சம்பிரதாயம். அந்தச் சம்பிரதாயத்துக்குப் பங்கம் இந்தக் கலிகாலத்தில் வந்துவிடுமோ என்று பயந்து முனிசிபல் உபநதிகள் பல அதில் வந்து சேருகின்றன' என வரும் வாக்கியங்கள் இன்றளவும் தீராத பிரச்னையாக இருப்பது புதுமைப்பித்தனின் தீர்க்கதரிசனத்தைக் காட்டுகிறது.
வேட்டைக்குச் சென்ற கதை நாயகன், வேதாளத்துக்கு உடம்பைத் தேற்ற ஆலோசனை சொல்லும் 'வேதாளம் சொன்ன கதை' சிரிப்பை வரவழைக்கிறது. நூல் வாசிப்பவர்களை நிச்சயம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.