ஆர்யபடரின் கணிதம்
ஆர்யபடரின் கணிதம் - பத்ரி சேஷாத்ரி; பக் 88; ரூ. 110; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; ✆ 044 - 4200 9603.
உலக கணித வரலாற்றில் இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையான எண்களின் உருவாக்கம், பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு, கணித விதிகளில் முன்னோடியான சாதனைகளை நிகழ்த்தியவர்கள் இந்தியர்களே. சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பாய்ச்சல் நிகழ்ந்திருக்கிறது.
மாணவர்களுக்கு நமது கணித வரலாற்றையும், கணித முன்னோடியான ஆர்யபடரின் சிறப்புகளையும் அறிமுகம் செய்யும் விதமாக நூலாசிரியரின் இந்த நூல், இளைய தலைமுறையினருக்காக எழுதப்பட்டுள்ளது.
Advertisement
ஆர்யபடரின் 'ஆர்யபடீயம்' நூல், சம்ஸ்கிருத மொழியில், நான்கு பகுதிகளாக, செய்யுள் நடையில் 121 சூத்திரங்களாக எழுதப்பட்டன. அவற்றில் இரண்டாவது பகுதியான கணிதபாதத்தின் 33 சூத்திரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றுக்கு நவீன கணிதச் சமன்பாடு வரைந்து விளக்கம் அளித்திருக்கிறார் நூலாசிரியர்.
இன்றைய கணிதத்தில் குறிப்பிடப்படும் அல்ஜீப்ரா (இயற்கணிதம்), திரிகோணவியல், வடிவியல் கோட்பாடுகள் பலவற்றுக்கு முன்னோடியாக ஆர்யபடர் இருந்திருப்பதை இந்நூலில் எடுத்துக்காட்டும் ஆசிரியர், அவரைத் தொடர்ந்து உருவான கணித மேதாவிகளின் அணியையும், அதனால் விளைந்த கணித வளர்ச்சியையும் சுருக்கமாக சொல்லிச் செல்கிறார்.
கணிதச் சமன்பாடுகள் நிறைந்த, சற்று கவனத்துடன் படிக்க வேண்டிய இந்நூல், கணித ஆர்வலர்களுக்கு ஏற்றது. தமிழில் மாணவர்களுக்கு எளிய முறையில் அறிமுகம் செய்யும் இந்நூலின் வெற்றியே, இதே வரிசையில் மேலும் பல நூல்கள் வெளியாக வழிகோலும்.