அரிக்கன் லாந்தரும் நான் வந்த தடங்களும் (தன் வரலாறு)
அரிக்கன் லாந்தரும் நான் வந்த தடங்களும் (தன் வரலாறு) - கே.சி.எஸ்.அருணாசலம்; பக். 134; ரூ.150; கே.சி.எஸ். பதிப்பகம், சென்னை; 97109 28281.
பொள்ளாச்சியில் பிறந்த கே.சி.எஸ்.அருணாசலம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெரும்பங்காற்றியவர். அவரை பற்றிய தன் வரலாறு நூல் இது. அவரைப் பற்றி மட்டுமே புகழ் பாடாமல் அரசியல், கலை, இலக்கியம், திரைத்துறையில் எவரும் அறிந்திராத பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கொங்கு நாட்டின் பண்பாட்டு மரபையும், தமிழர்களின் வீரத்தையும் தனது கவிதைகளில் பறைசாற்றிய அவர், திரைத்துறையில் வந்த வாய்ப்புகளையெல்லாம் புறக்கணித்தது வியப்படைய வைக்கிறது.
கொள்கைக்காக, கம்யூனிஸ இதழ்களில் எழுதவே தனது வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பணித்தது நூலைப் படிக்கும்போது, வெளிப்படுகிறது. கம்யூனிஸ்ட்டான அவர், பாலனின் மரணத்தால் நிலைகுலைந்ததை ஆர்.நல்லகண்ணு எடுத்துரைக்கிறார்.
எழுத்து, எழுத்தாளர் சங்கம், பதிப்புத் துறை, கம்யூனிஸ்ட் இயக்கம் போன்றவற்றில் கே.சி.எஸ்.அருணாசலத்தின் பங்கு அளப்பரியது என்பதை நூல் விவரிக்கிறது.
இதேபோல், நாட்டின் முதல் பொதுத்தேர்தலில் கே.சி.எஸ். அருணாசலம் ஆற்றிய பணி, திரைத்துறையினர், அரசியல் தலைவர்களோடு அவருக்கு இருந்த தொடர்புகளோடு வியக்க வைக்கும் தகவல்கள் பலவும் இடம்பெற்றுள்ளன.
நூலில் கலை, இலக்கியம், அரசியல் குறித்து இளைய தலைமுறையினர் அறியும் வண்ணமாக, வரலாற்றுத் தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளது சிறப்பு. நூலின் பிற்பகுதியில் அவரது சிறப்புமிக்க படங்களும், குடும்பத்தாரின் படங்களும் இடம்பெற்றுள்ளன. தன் வரலாற்று நூல்களில் முற்றிலும் மாறுபட்ட நூல் இது.