மொழிபெயர்ப்பியல்: பயணங்கள், பரிமாணங்கள்
மொழிபெயர்ப்பியல்: பயணங்கள், பரிமாணங்கள் - கே. தியாகராஜன்; பக். 592; ரூ. 675; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்; 04652 - 278525.
மொழிபெயர்ப்பு பற்றி ஆய்வு நோக்கில் விரிந்த பார்வையுடன் அதன் அனைத்து அம்சங்களையும் கருத்தில்கொண்டு இனம் பிரித்து, மொழிபெயர்ப்பியலின் பயணங்கள், பரிமாணங்களை எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
மொழிபெயர்ப்பு, மொழி மாற்றம், மொழியாக்கம் எனப் பகுத்து விளக்கும் ஆசிரியர், ஒரு மொழிபெயர்ப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதற்காக தியோடர் ஹோரஸ் சேவரியின் மிகச் சிறந்த அறிவுறுத்தல்களை மேற்கோள் காட்டுகிறார்.
சொல்லுக்குச் சொல், கட்டற்ற மொழிபெயர்ப்புகள் பற்றி விவாதிப்பதுடன், மொழிபெயர்ப்பில் எது சரி / சரியல்ல என்பதைவிட, எது சாத்தியமாகும் / சாத்தியமாகாது என்பது மேலோங்கிய வழிகாட்டலாக இருக்கும் என்கிறார் ஆசிரியர்.
மொழியாக்கச் சிந்தனைகள் வரலாறு பற்றிக் கூறும்போது, தமிழகத்தைப் பொருத்து மட்டுமின்றி, மேற்கத்திய வரலாறும் எடுத்துக்காட்டப்படுகிறது.
ஸ்தனதாயினி என்ற மஹாஸ்வேதா தேவியின் சிறுகதையை எடுத்துக்கொண்டு மொழியாக்கத்தை விளக்குவதுடன், நூலில் தேவைப்படும் இடங்களில் எல்லாமும் அவசியமான எடுத்துக்காட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
மொழியியல் பகுதியில் ஒரு பாட நூலுக்குரிய செறிவுடன் தரவுகள் தரப்படுகின்றன. மொழியியல், மொழிபெயர்ப்பியலின் இருவழிப் பயன்களும் விளக்கப் பெறுகின்றன.
இலக்கியம் பகுதியில், ஆசிரியர் 'மரணம்' பற்றிக் கூறும்போது, பனுவல் ஒன்றுதான் என்றாலும் வாசிப்புகள் கணக்கற்றவை, காணும் அர்த்தங்களும் கணக்கற்றவை என்கிறார்.
வாழ்நாள் உழைப்பை வெளிப்படுத்தும் இந்த நூலாக்கத்தில் நூலாசிரியரின் பணி அனுபவம் மிகப் பெரும் வலுவாக அமைந்திருக்கிறது.
தமிழ்ப் பனுவல் உலகில் தீவிர கவனம் செலுத்தப் பெறாத, ஆனால் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய துறையான மொழிபெயர்ப்பியல் பற்றி வெளிவந்துள்ள மிக முக்கியமான நூல். வாசகர்கள் மட்டுமின்றி மொழிபெயர்ப்பாளர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூலும்கூட.