விவசாயிகள் போராட்ட பூமியில் 25 நாட்கள்!
விவசாயிகள் போராட்ட பூமியில் 25 நாட்கள்! கொள்ளையனே வெளியேறு - சி. மகேந்திரன்; பக். 256; ரூ. 250; நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை -14; ✆ 044 43993029.
பெருநிறுவன ஆதரவு சட்டங்களுக்கு எதிராக, தில்லி அருகே சிங்கு எல்லையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்ட களத்தில் 25 நாள்கள் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரனின் நேரடி அனுபவங்களின் பதிவுதான் இந்த நூல்.
மத்திய அரசின் முயற்சியைக் கண்டிப்பதுடன், உலகளாவிய அளவில் விவசாயத்திலிருந்து பெருநிறுவனங்கள் எவ்வாறு விலக்கிவைக்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றி உரையாடல்களின் வழியே தெரிவிக்கிறார் நூலாசிரியர்.
போராடியோரில் பெரும்பாலோர் சீக்கியர்கள் என்பதால், சீக்கிய மத அறிமுகமும் அந்த மக்களின் வரலாறும் போர்க்குணமும் எடுத்துரைக்கப்படுகிறது.
சிறுசிறு விஷயங்களையும்கூட கவனித்துப் பதிவு செய்திருக்கும் ஆசிரியர், ஒரு நகவெட்டியை வைத்திருந்தது பற்றி மட்டுமின்றி, மருத்துவ உதவி மையம், நூலகம் போன்றவை செயல்பட்ட விதத்தையும் விளக்குகிறார்.
விளையாட்டுப் பயிற்சி, சலவை இயக்கம், காலணிகளுக்கான சேவை, கல்வி கற்பிக்கும் கூடாரங்களுடன், லங்கர் என்ற இலவச உணவு வழங்குமிடமும் அணையா அடுப்பும் போராட்ட களத்தை எவ்வாறு பசியற்ற பூமியாக்கியிருக்கிறது என்பதும் குறிக்கப்படுகிறது.
எல்லைப் பகுதிகளில் ஒன்றுமறியா மக்களை வைத்து அரசு அமைப்புகளால் நடத்தப்படும் சூது ஆட்டம் பற்றி நேரடி சாட்சியங்களுடன் நூல் விளக்குகிறது.
போராட்ட களம் ஒரு வாழ்க்கை முறையாகத் தெரிகிறது என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். அடிப்படையில் அரசியல் செயற்பாட்டாளரான ஒருவரின் பன்முகப் பார்வைப் பதிவாகத் தமிழுக்கு வாய்த்திருக்கிறது இந்த நூல். ஒட்டுமொத்த நூலும் போராட்ட பூமியின் நேரலை வர்ணனையாக, கூடவே, உலகளாவிய பார்வை, சொந்தக் கருத்துகள், சமூகம் சார்ந்த விமர்சனங்களுடன் அமைந்திருப்பது சிறப்பு.