தமிழ்நாட்டுப் போர்க்களங்கள்
தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் - எஸ். கிருஷ்ணன்; பக். 176; ரூ. 200; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆ 044 - 42009603.
வரலாற்றுப் பாட நூல்களில் சில வரிகளில் அறிமுகம் ஆகியிருக்கும் தமிழகத்துப் போர்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் தேடியெடுத்து, பொதுவான வாசகர்களுக்குத் தேவையான அளவில் விறுவிறுப்பாகத் தந்திருக்கிறது இந்த நூல்.
சங்க இலக்கியங்களிலிருந்து கொண்ட சான்றுகளுடன் கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றையும் தரவுகளாகக் கொண்டு போர்க் களங்களின் வரலாறு விவரிக்கப்படுகிறது. தமிழகத்தில் நடந்த போர்களின்வழி நேரிட்ட அரசியல் மாற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போர்கள் தொடர்பாகத் தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கும் ஒவ்வொரு தகவல் குறிப்புகளையும் கவனத்தில் கொண்டு, தகடூர்ப் போர் போல ஒவ்வொரு போரையும் ஆசிரியர் விவரித்திருக்கிறார்.
தக்கோலப் போர் பற்றிய கட்டுரையில், தமிழகம் முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்த அரசன் என்ற பெருமையை முதன்முதலில் பெற்றவன் முதலாம் பராந்தகச் சோழன் என்பது போன்ற பல சிறப்புத் தகவல்கள் ஆங்காங்கே எடுத்துக்காட்டப்படுகின்றன.
பல்லவ பாண்டியப் போர்கள், பிற்காலச் சோழர் பேரரசு உருவாகக் காரணமான திருப்புறம்பியம் போர், இன்னமும்கூட தெளிவுகள் கிடைக்காத காந்தளூர்ச் சாலைப் போர், ராஜராஜ சோழனின் படையெடுப்புகள் பற்றியெல்லாமும் விளக்கப்பட்டுள்ளன.
சோழர்கள் நிலை தாழ்ந்து பாண்டியர்கள் மேலோங்கிய காலகட்டத்துப் போர்களைப் பற்றிய குறிப்புகளுடன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனின் போர்கள் குறித்த தகவல்களும் குறிப்பிடத்தக்கவை.
வாசகர்களால் அவ்வளவாக அறியப்படாத பெருவளநல்லூர், சேவூர், தோப்பூர் போர்கள் பற்றியும் நூலில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. தமிழகத்தின் பெரும் போர்களைப் பற்றியெல்லாம் வாசகர்கள் சுருக்கமாகவும் எளிதாகவும் அறிந்துகொள்ள உதவும் நூல்.