முகப்பு
நூல் அரங்கம்

அ. முத்துலிங்கம் கதைகள்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

அ. முத்துலிங்கம் கதைகள் (இரு தொகுதிகள்) ; பக். 672 + 688; ரூ. 1,800, நற்றிணை பதிப்பகம், சென்னை- 87; ✆ 94861 77208.

அறுபதுகளில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் அ. முத்துலிங்கத்தின் இதுவரையிலான அனைத்துச் சிறுகதைகளும் இரு தொகுதிகளாக சிறந்த தரத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. இவரின் கதைகளும் கட்டுரைகளும் எப்போதுமே வாசகர்களுக்கு மிகவும் நெருக்கமானவை என்பதுடன் நுட்பமான உணர்வுகளைத் தொட்டுச் செல்பவையும்கூட.

ஒருசேரப் படிக்கும்போது ஏதோ ஒரு பெரிய  உள்மன உலகை வலம் வந்ததைப் போன்ற அனுபவத்தைத் தருகின்றன.  கதைகள் ஒவ்வொன்றும் ஒருவித அனுபவம்.

தந்தைக்கும் மகளுக்குமான உறவைப் பேசும் "பூமாதேவி' என்ற கதையில் அந்த சனிக்கிழமை நேரங்களை அவர் எதிர்பார்த்திருக்கும் தருணங்களுடன் பூமாதேவியுடனான உறவும் அனுபவங்களும் தற்காலப் பயணத்தில் 'யார் பூமாதேவி?' என்ற மகளின் ஒற்றைக் கேள்வியுடனான மெüனமும் தந்தைமையைக் காட்டுகின்றன.

உள்நாட்டுப் போரில் தப்பிய சகோதரர்களான இரு சிறார்களின் 'நாளை'யில் ஹெலிகாப்டர் காற்றாடி சுழலும்போது சாவு, சாவு என்று தோன்றுகிறது பெரியவனுக்கு. உலகில் எந்தவொரு நாட்டுடனும் பொருந்திப் போகும் இந்தக் கதையில், அண்ணா, என்னைவிட்டுப் போகமாட்டியே என்ற தம்பியின்  அழுகுரலிலும் கஞ்ச் முகாமில் கட்டாயம் இறைச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் புதைந்திருக்கிறது பெருந்துயரம்.

இதேபோல, தொடக்கம், ஆயுள், அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை, எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை... இன்னும் நிறைய கதைகளை இவ்வாறு சொல்லிக்கொண்டே செல்லலாம்.

இலங்கையில் கொக்குவில்லில் பிறந்து, தற்போது கனடாவில் வசித்துவரும் முத்துலிங்கத்தின் எழுத்துகளில் பெரும்பாலானவை புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழர்களையும் பிரதிபலிப்பவை. இலக்கிய வாசிப்பாளர்களின் சேகரத்தில் இடம் பெற வேண்டியவை இந்தத்  தொகுதிகள்.
 

முழு கட்டுரையைப் படிக்க →