என்ன பேசுவது! எப்படிப் பேசுவது!! - இறையன்பு; பக். 816; ரூ.1,000; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 50; ✆ 044 - 26251968.
தகவல் பரிமாற்ற வரலாறு, தகவல் தொடர்பில் சிறக்க, மேடையில் முழங்கு என மூன்று இயல்களில் 134 தலைப்புகளில் 'என்ன பேசுவது, எப்படிப் பேசுவது' எனப் பெருநூலாக எழுதியிருக்கிறார் வெ. இறையன்பு.
தகவல் பரிமாற்ற வரலாற்றில் வாயில்லா பிராணிகளில் தொடங்கி, மொழி, எழுத்து, அச்சு பற்றிப் பேசி வரலாற்றுச் சொற்பொழிவுகளுடன் முடிக்கிறார். தகவல் பரிமாற்றக் கூறுகள் பற்றிய பிரிவில் உரையாடல்கள், நேர்முகத் தேர்வு, அலுவலகக் கூட்டங்கள், பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் என விவரிக்கும் விஷயங்களிலும் பார்வையிலும் மேம்பட்டதோர் ஆட்சிப் பணி அலுவலரின் அனுபவம் மிளிர்கிறது.
மேடையில் முழங்கில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் யாவும் பேச்சாளர்களுக்கும் பேச்சாளர்களாக விரும்புவோருக்கும் சிறந்த கைவிளக்கு. சிறந்த படிப்பாளிகள், சிறந்த பேச்சாளர்களாகவும் சிறப்பான எழுத்தாளர்களாகவும் திகழ்வது மிகவும் குறைவு. எல்லாமும் ஒருசேரப் பெற்றவரான இறையன்பு, அதன் பெறு (பெரும்) பலனைத் தமிழ் வாசகர்களுக்காக நூலாகப் பிழிந்து தந்திருக்கிறார்.
முன்னுரையில் அவரே கூறுவதைப் போல 'வாசகர்களின் செவிகளில் எதிரொலிக்கச் செய்ய சரித்திரத்தில் இடம் பெற்ற சொற்பொழிவாளர்களின் தலைசிறந்த உரைகளையும்' அடுத்தடுத்து இறையன்பு மொழிபெயர்த்துத் தர வேண்டும். பேச்சு என்ற ஒற்றைச் சொல்லுக்குப் பின் இவ்வளவு விஷயங்களா என்று படித்து முடிக்கும்போது வியக்கவும் மலைக்கவும் வைக்கிறது இந்த நூல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.