இந்திய இலக்கியச் சிற்பிகள்
இந்திய இலக்கியச் சிற்பிகள் எம்.வி. வெங்கட்ராம்- ரவிசுப்பிரமணியன்; பக். 128; ரூ. 50; சாகித்திய அகாதெமி, சென்னை -18; ✆ 044-2431 1741.
தமிழிலக்கிய உலகில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த "மணிக்கொடி' இதழின்வழியே எழுத்துலகுக்கு அறிமுகமானவர் எம்.வி.வி. என்று அறியப்படும் எம்.வி. வெங்கட்ராம். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை எனப் பல்வேறு தளங்களில் இயங்கிவந்த இவரின் வாழ்க்கை அனுபவங்களையும் எழுத்துலக அனுபவங்களையும் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூலாசிரியர்.
நெசவாளர் குடும்பத்தில் பிறந்த எம்.வி.வி.யின் வாழ்க்கைமுறையின் பின்னணியில் எழுதிய 'பைத்தியக்காரப் பிள்ளை' உளவியல் ரீதியிலான அற்புதப் படைப்பு (தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மகனைத் துன்புறுத்தும் தாய், தன் காதலன் நல்லவேளையாக திருமணத்திற்குப் பின் இறக்கவில்லையே என ஆறுதல் கொள்ளும் காதலி - இப்படிப்பட்ட பாத்திரங்கள்). இவரின் "வேள்வித் தீ' நாவலும் இதே பின்னணி கொண்டது. தனது செவித்திறனில் பாதிப்பு ஏற்பட்டபோது, அந்த அனுபவத்தையே 'காதுகள்' என்கிற பெயரில் நாவலாக எழுதினார்.
Advertisement
அன்றைக்கே அம்னீஷியா நோயால் பாதிக்கப்பட்டவரை மையமாக வைத்தும், திருநங்கையை முதன்மைப் பாத்திரமாக வைத்தும் இவர் கதைகளைப் படைத்துள்ளார்.
தி. ஜானகிராமன், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், கரிச்சான்குஞ்சு போன்ற எழுத்தாளர்கள் எம்.வி. வெங்கட்ராமின் நண்பர்களாக மட்டுமல்லாது அவர் வாழ்க்கையையே வடிவமைத்தவர்களாக இருந்துள்ளனர் என்பதை இந்நூல்வழி உணர முடிகிறது.
எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராமின் ஏற்ற, இறக்கம் மிக்க வாழ்க்கையை அச்சு அசலாகப் பதிவு செய்துள்ளது இந்நூல்.