முகப்பு
நூல் அரங்கம்

திருக்குறளில் இன்றைய மேலாண்மை

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

திருக்குறளில் இன்றைய மேலாண்மை - இரா.மனநாதன். பக்.205; ரூ.249: நோஷன் பிரஸ்.காம் (வலைதளம்).

திருக்குறள் எழுதப்பட்ட காலம் தொடங்கி இனிவரும் காலம் வரை அனைவராலும் எடுத்தாளப்படும் பல கருத்துகளை கொண்டுள்ளது. இன்றைய காலத்தில் ஒரு நிறுவனத்தை மேலாண்மை செய்யும் வகையில் திட்டமிடல், ஆராய்ச்சிப் பயன்முறை, வணிகமுறை, சொல்வன்மை உள்ளிட்ட கருத்துகளை ஆசிரியர் குறள்கள் வழியே விளக்கியுள்ளார். வள்ளுவர் ஒரு அரசனுக்குக் கூறிய அறிவுரைகளைக் கூர்ந்து நோக்கினால் அவை அனைத்தும் இன்றைய மேலாண்மைக்கு வெகுவாகப் பொருந்தி வருகிறது என்பது ஒரு வியத்தகு உண்மை.

குறிப்பாக அமைச்சு, ஒற்றாடல், தூது போன்ற குறள்கள் இன்றைய மேலாண்மைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளன. தற்போதைய தொழில் வளர்ச்சியில் புத்தொழில் தொடங்க  கூட இன்றைய இளைஞர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் திருக்குறளின் வழியே புத்தாக்கத்தை தருகிறார் நூலாசிரியர்.

ஒரு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர், மேலாளர் அதன் பணியாளர்களை வழிநடத்தும் முறைகளையும், நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் உத்திகளையும் விவரிக்கிறார். இந்நூலில் காணப்படும் பணியாளர்களிடையே நேர்மை எண்ணத்தை வளர்ப்பது, சரியான முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்திக் கொள்வது மற்றும் தலைசிறந்த சேவைகளை அளிப்பது போன்ற உட்கருத்துகள் இன்றைய மாறிவரும் வணிக உலகுக்கு மிகவும் ஏற்புடையதாகவுள்ளன.

ஒவ்வொரு குறளுக்கும் அதற்கு ஏற்ற நிகழ்கால எடுத்துக்காட்டுகளை ஆசிரியர் முன்வைப்பது வாசகருக்கு கூடுதல் ஆர்வத்தை தூண்டுகிறது. தொழில், வணிகத் தலைவர்கள், உரிமையாளர்கள், வணிகத் துறை மாணவர்கள் என அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →