உப்பும் சமூக மதிப்பு மாற்றமும்; முனைவர் நா.சுலோசனா; பக்.178; ரூ.150; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600 113, ✆ 044-22542992.
அறுசுவைகளுள் ஒன்றான உவர்ப்புச் சுவையைக் குறிக்கும் உப்பு என்பது சுவையின் தன்மையைக் கூட்டுவதோடு மட்டுமன்றி உணர்வுபூர்வமானதும்கூட.
'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்று நன்றி உணர்வுக்கும், 'சோற்றில் உப்பு போட்டுத் தானே உண்கிறாய்' என்று கோபத்துக்கும் வைராக்கியத்துக்கும் உப்பு உதாரணமாகத் திகழ்கிறது. 'உப்பு' என்ற ஒரு வார்த்தையை எடுத்துக்கொண்டு அதன் பயன்பாடு குறித்து தமிழ்மொழியின் பல்வேறு வடிவங்களிலிருந்து தரவுகளைத் திரட்டி 'சுவையான' நூல் அமுது படைத்திருக்கிறார் நூலாசிரியர்.
உப்பு வகைகளும் உருவாக்கும் முறைகளும் முதல், உப்பும் பயன்பாட்டுச் சொற்களும் ஈறாக 13 கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. 'சமுத்திரமணி, நீர்ப்படிகம், கடல் தங்கம், பூமி கற்பகம், சமுத்திர ஸ்வர்ணம், சுவர்ண புஷ்பம், சமுத்திர கனி, ஜலமாணிக்கம்' என்று உப்பு பல பெயர்களில் வழங்கப்படுகிறது.
செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்), உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தால்தான் 'சம்பளம்' என்ற சொல் பிறந்தது. கடலிலிருந்து உப்பு தயாரிக்கப்படுகிறது என்பதை அனைவரும் அறிவர். ஆனால், ஏரி, நிலம், பாறையிலிருந்தும் உப்பு தயாரிக்கப்படுகிறது- இவையெல்லாம் இந்த நூல் சொல்லும் தகவல்கள்.
இந்திய விடுதலை வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த உப்புச் சத்தியாகிரகம் குறித்த கட்டுரை உப்பின் மகத்துவத்தை உணர்த்துகிறது. சங்க இலக்கியங்களில் உப்பு தொடர்பான பல்வேறு செய்திகளை கட்டுரையில் மேற்கோள் காட்டியிருப்பது நூலாசிரியரின் அபார உழைப்புக்கு சாட்சி. உப்புத் தொழிலுக்குரிய புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு. ஆராய்ச்சி மாணவர்களுக்கு அரிய கருத்துக் கருவூலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.