மாத்தளை சோமு நூறு சிறுகதைகள் (இரு தொகுதிகள்)-தொகுதி-1; பக்.400; ரூ.330; தொகுதி-2; பக்.388; ரூ.300; மாத்தளை சோமு; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-600 050; ✆ 044- 26251968.
நூலாசிரியரின் பூர்விகம் திருச்சி துறையூர் அருகேயுள்ள கிராமம். இலங்கை மலையகத்தின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் மாத்தளையே இவர் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம். யுத்த காலத்தில் ஆஸ்திரேலியாவில் குடியேறினார்.
45 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தொகுப்பாசிரியராக இருந்து, பேராசிரியர் க.கைலாசபதியின் வாழ்த்துரையுடன் வெளிவந்த 'தோட்டக்காட்டினிலே' என்ற தொகுப்பில், 'இதயதாபம்' என்ற சிறுகதையை எழுதியதன் மூலம் எழுத்தாளராக அறிமுகம் ஆனார். இவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளில் ஒரு நூற்றைத் தேர்ந்தெடுத்து இரு தொகுதிகளாக்கியுள்ளார். மலையகக் கதைகள்-37, தமிழகத்தில் அகதிமுகாம் வாழ்க்கை- 18, வெளிநாடுகளில் வாழ்க்கை- 40, சரித்திரக் கதைகள்- 5 என இதில் பிரிக்கப்பட்டுள்ளன.
மலையக வாழ்க்கை என்பது வரிசை (லயன்) வீடுகள், 'காம்ப்ரா', 'சுரத்தை' எனப்படும் மண் சாலைகள், மலையிலிருந்து ஊற்றெடுக்கும் 'பீலியடி', மாரியம்மன் கோயில்கள், அதன் விழாக்கள் ஆதரவற்றவர்களுக்கு வழங்கப்படும் 'கட்டைமொய்' எனப்படும் மலையக நிலம் எனப் பண்பாட்டு அம்சங்களுடன் அதிகாரச் சுரண்டல், பெரியவர்-
சிறியவர் எனப் பாகுபாடு இல்லாமல் நடக்கும் அவலங்கள் சிறுகதைகளாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் வாழ்க்கைக்கு வாழ்ந்த பூமியே மேல் என்று நினைக்கத்தக்க வகையில், அமையும் வாழ்க்கைப் போராட்டங்கள் கதைகளாக அமைந்துள்ளன. சில கதைகள் முள்ளிவாய்க்கால் போரின் அழிவையும், வாழ்வையும் சித்திரிக்கும் கதைகளாக அமைந்து மனதைக் கனக்கச் செய்கின்றன. 'இதயதாபம்' என்கிற முதல் சிறுகதையிலிருந்து நூலாசிரியரின் வாழ்க்கையும் அனுபவமும் பின்னிப் பிணைந்து படைப்பனுபவமாக மாறி நம்மைப்பேச வைக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.