அருள்திரு மாணிக்கவாசகர் திருவரலாறு (புதிய பாணியில்) -இராமநாதன் பழனியப்பன்; பக்.232; ரூ.230; அருள்மிகு செல்வமூர்த்தி விநாயகர் சாரிட்டபிள் ட்ரஸ்ட், புதுப்பட்டி, புதுக்கோட்டை-622 407, ✆ 99432 24799.
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் சோதியாகிய சிவப்பரம்பொருள் தம் திருக்கரத்தால் எழுதிய நூல்; மனிதன் கூற இறைவன் எழுதிய நூல்; முதலில் அச்சிடப்பெற்ற திருமுறை; முதலில் மொழிபெயர்க்கப்பட்ட திருமுறை உள்ளிட்ட பல்வேறு பெருமைகளைக் கொண்ட திருவாசகத்தை படைத்த மாணிக்கவாசகரின் வரலாற்றை ஆய்வு நோக்கில் செப்புகிறது இந்நூல்.
அரிமர்த்தன பாண்டியனிடம் தென்னவன் பிரம்மராயன் என்ற பெயரில் மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்தது முதல் திருச்சிற்றம்பலத்தில் சிவனின் திருவடிகளில் இரண்டறக் கலந்தது வரையிலான அத்தனை அருள்திரு நிகழ்வுகளையும் விதந்தோதி இந்நூல் பதிவு செய்துள்ளது.
பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், திருக்குறள், தேவாரம், கம்ப ராமாயணம், திருமந்திரம், திருவருட்பா உள்ளிட்ட ஆகச் சிறந்த படைப்புகளில் இருந்து உரிய பாடல்களை இந்த நூலில் மேற்கோள் காட்டியிருப்பது மிக்க பொருத்தமாய் அமைந்துள்ளது.
சைவம், பெளத்தம், சமணம் சார்ந்த செய்திகள்; நால்வர் பெருமக்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகள்; உத்தரகோச மங்கை, தில்லை, திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய சைவத் திருத்தலங்கள் குறித்த குறிப்புகள், அஸ்வ சாத்திரப்படி குதிரைகளின் உயரம், நிறம், சுழி குறித்த விரிவான விவரங்கள் உள்ளிட்ட பிற தகவல்கள் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டிருப்பது இந்த நூலுக்கு தனித்துவம் ஊட்டுகிறது.
சைவ சிந்தாந்தக் கருத்துகளை பருந்துப் பார்வையில் அலசுவதோடு மட்டுமல்லாது, இலக்கிய உலகிலும் இந்த நூல் சிறப்பிடம் பெறும் வகையில் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.