விலாயத் புத்தா-ஜி.ஆர்.இந்துகோபன்-தமிழில் சுகானா; பக்.136; ரூ.222; வானவில் புத்தகாலயா, சென்னை- 600 017, ✆ 044-2986 0070.
சந்தன மரக் கடத்தல் குறித்து, பத்திரிகையாளரான நூலாசிரியர் எழுதிய இந்த மலையாள நூல், 'மருகையா' என்ற பெயரில் திரைப்படமானது. இந்த நூலை திருவண்ணாமலையைச் சேர்ந்த எழுத்தாளர் சுகானா தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
உலகிலேயே தரமான சந்தன மரங்கள் காணப்படும் கேரள மாநிலத்துக்கு உள்பட்ட மூணாறுக்கு அருகேயுள்ள மறையூரில் உள்ள மலைமுகட்டில் நடக்கும் கதைதான் இது.
அதாவது, பாஸ்ரன் வாத்தியார் தான் மரணமடையும்போது தன் உடல் சந்தனக் கட்டையால் எரியூட்டப்பட்டு அதன் வாசம் வீச வேண்டும் என்று சந்தன மரத்தை வளர்க்க, அதை வெட்டுவதற்காக வரும் அவரது மாணவரான கடத்தல்காரன் டபிள் மோகனனுக்கும் இடையே நடைபெறும் கதை இது. இடையில் காதல், பழிவாங்கல், பகை, அதிகாரம், நிச்சயமின்மை, கையறுநிலை என்று வாழ்வின் அனைத்து நிலைகளையும் சேர்த்து உருவாகியுள்ளது இந்த நூல். விபத்தாக நிகழ்ந்த அசாதாரண நிகழ்வுகளின் பின்னணியில் அரசியல், சமூகம், நடைமுறைச் சூழல்களை இணைத்தும் விறுவிறுப்பாகப் படிக்கும் சூழலில் எழுதியுள்ளார்.
'விலாயத் என்றால் பில்லாத்தி, இங்கிலாந்து, வெளிநாடு, தரமிக்க என்றெல்லாம் பொருள். ஒரு டன் எடைக்கு 116 மரத்துண்டுகள் இருக்க வேண்டும். அதாவது, ஒரு மரத்துண்டு ஒரு கிலோ. ஆயிரத்தில் ஒரு சந்தன மரம்தான் விலாயத் புத்தாவுக்கு ஏற்புடையாதாகும்' என்று விளக்கம் அளிக்கிறார் நூலாசிரியர்.
இதேபோன்று சந்தன மரங்கள் குறித்த அரிய தகவல்களையும், நிறைய விஷயங்களையும் கதையின் வாயிலாக அறிய முடிகிறது. வனத் துறையினர் அலுவல் ரீதியாகப் பயன்படுத்தும் விவரங்களுக்கு அப்பால், சந்தனக் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் விவரங்கள் சிலவற்றையும் நூலாசிரியர் வெளிப்படுத்துகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.