இசை அரசி பி. சுசீலா (ஒரு சகாப்தத்தின் இன்னிசைப் பயணம்)
இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது நூலாசிரியர் கோடிட்டுக் காட்டும் பாடல்களை நமது அறிதிறன் பேசி உதவியுடன் உடனுக்குடன் ஒலிக்க விட்டு ரசிக்க இயலுவது கூடுதல் இன்பம்.
இசை அரசி பி. சுசீலா (ஒரு சகாப்தத்தின் இன்னிசைப் பயணம்)- பி.ஜி.எஸ். மணியன்; பக். 448; ரூ. 450; வைகுந்த் பதிப்பகம், நாகர்கோவில்-629 002, ✆ 94420 77268.
தென்னிந்திய திரையிசை வரலாற்றை பி. சுசீலா எனும் அல்லிசை புள் (நைட்டிங்கேல் பறவை) தவிர்த்து விட்டு யாராலும் எழுதவே முடியாது. தனது ஆத்மார்த்த உழைப்பாலும் ஈடுபாட்டாலும் பொறுமையாலும்தான் பி. சுசீலாவின் உலக சாதனையான 17,965 பாடல்கள் காற்றில் மிதந்து கொண்டிருக்கின்றன.
அதிகாலை சாதகம் செய்ய அப்பாவின் வற்புறுத்தலால் எழுந்து, விருப்பமில்லாமல் செய்த சாதகங்கள்தான் பின்னாளில் ஏழு ஸ்வரங்களையும் தனதாக்கிக் கொண்ட சாதனையை அந்த இசையரசிக்குச் சொந்தமாக்கியது.
பிறமொழி பாடகர்களைப் பாட வைக்கத் தயங்கிய காலத்தில் தனது குரலை அந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகளுக்குப் பொருத்தமாக இருக்கும்படி பாடத் தொடங்கிய நேரத்தில் தனித்துவம் பெற்றார் பி. சுசீலா. தமிழில் 'ல- ள- ழ' என வேறுபடுத்தி பாடல்களைப் பாடியதில் இவரது திறன் தனித்துவமானது.
ஒவ்வொரு இசையமைப்பாளருடனும் பி. சுசீலாவின் இசைப் பயணம் எப்படி தொடங்கியது; இசையமைப்பாளர்களின் குறிப்புகளுக்குக் கூடுதலாக இனிமை சேர்த்த அவரின் ஞானம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் இந்தப் புத்தகத்தில் ஏராளமாக இருக்கின்றன.
மொத்தம் 40 அத்தியாயங்கள், எண்ணிலடங்கா சுவாரஸ்ய நிகழ்வுகளுடன் பி. சுசீலா வாழும் காலத்திலேயே வந்திருப்பதால் இந்த நூல் நிச்சயம் அவரது ஆசிபெறும் என்பதில் ஐயமில்லை. திருவிளையாடல் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியை விவரிக்கும் விதம் இந்நூலாசிரியரின் மொழியாளுமையையும், இசை ஞானத்தையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது நூலாசிரியர் கோடிட்டுக் காட்டும் பாடல்களை நமது அறிதிறன் பேசி உதவியுடன் உடனுக்குடன் ஒலிக்க விட்டு ரசிக்க இயலுவது கூடுதல் இன்பம்.