முகப்பு
ஆன்மிகம்

ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை - பாசுரம்- 12

இளங்கன்றுகளை உடைய எருமைகள் தம் மடியில் பால்கறப்பவர் இல்லாததால் மடி கனத்து

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்

அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:  பதினொன்றாவது பாசுரத்தில் சுற்றத்தாருடன் தோழியின் திருமாளிகை முற்றத்தே புகுந்து கண்ணனின் பெருமைகளைப் பாடியும் எழாது இருக்கின்றாயே என்று வினவிய ஆண்டாள், இந்தப் பாசுரத்தில், மனத்துக்கினியானான ஸ்ரீராமன் சீற்றத்தையும் புகழையும் சொல்லிப் பாடுகிறோம்... தோழியே துயில் எழு! என்கிறார்.

இளங்கன்றுகளை உடைய எருமைகள் தம் மடியில் பால்கறப்பவர் இல்லாததால் மடி கனத்து கதறிக் கொண்டிருக்கும். அப்போது கன்றுகளின் நினைவு வர, அவற்றின் மீது இரக்கம் கொண்டு, கன்றுகளுக்குப் பாலூட்டுவதாக எண்ணி, அந்த நினைவினால் முலை வழியே இடைவிடாமல் அவை பால் சொரியும். அவ்வாறு பெருகிய பால், வீடு முழுவதும் நிறைந்து ஈரமாகி, சேறாகிவிடும். இத்தகைய வளமை நிறைந்த செல்வத்தை உடையவனின் தங்கையே! சீதைப் பிராட்டியை தன்னிடம் இருந்து பிரித்தானே என்ற சீற்றம் கொண்டு, தென் இலங்கை அரசன் ராவணனை போரிட்டுக் கொன்று ஒழித்தான் அந்த ராமபிரான். எங்கள் மனத்துக்கு இனியவனான அந்த ராமபிரானை நாங்கள் பாடியபடி இருக்கின்றோம்.

மார்கழிப் பனியானது எங்கள் தலையில் விழும்படி உன் மாளிகையின் வாசல்புறத்தே வந்து நின்றபடி நாங்கள் ராமனைப் பாடுகின்றோம். ஆனால் நீயோ வாய்திறந்தும் பேசாது இருக்கின்றாய். எங்கள் ஆற்றாமையை அறிந்து கொண்ட பிறகாவது நீ எழுந்து வரலாகாதா? இது என்ன இப்படி ஓயாத உறக்கம்! இந்த ஊரில் உள்ள வீட்டுக்காரர்கள் அனைவருக்குமே, நாங்கள் உன் மாளிகை வாசலில் திரண்டு வந்து நிற்பது தெரிந்துள்ளது. அப்படி இருக்க நீ இன்னும் இவ்வாறு பேருறக்கம் கொள்ளலாமோ என்று வினவுகிறார் ஸ்ரீஆண்டாள்.

சிறு பெண் சீதைக்குத் துன்பம் விளைவித்த ராவணனைச் செற்ற நம் மனத்துக்கினியானான ராமபிரான், சின்னஞ் சிறுமிகளான நம் துன்பத்தையும் துடைக்க ஓடோடி வரமாட்டானோ என்பதைத் தோழிக்கு உணர்த்தி துயில் எழுப்புகிறார் இந்தப் பாசுரத்தில்!

விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.