திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு எள் உருண்டை பிரசாதம்!
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு எள் உருண்டை பிரசாதம் இலவசமாக வழங்கும் புதுமைத் திட்டத்தை கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு எள் உருண்டை பிரசாதம் இலவசமாக வழங்கும் புதுமைத் திட்டத்தை கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சந்நிதி கொண்டுள்ளார். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு தரிசனத்திற்கு வருகை தருகின்றனர்.
ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு எள் விசேஷமான உணவுப் பொருளாக கூறப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் முடிந்து, விசேஷ பிரார்த்தனைகளை முடித்து, எள் சாதத்தை, காக்கைக்கு வைக்கும் வழக்கம் கோவிலில் நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் சில விசேஷ காலங்களில், எள் பொடி தயார் செய்து, ஸ்ரீசனீஸ்வரருக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதும் நடைமுறையில் உள்ளது. பக்தர்கள் அனைவரும் எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். இவ்வாறு எள் சனீஸ்வரருக்குரியது என்பதால் அதற்கு மதிப்பு கூடுகிறது.
கோவில் நிர்வாக அலுவலராக அண்மையில் பொறுப்பேற்ற ஏ.ராஜராஜன்வீராசாமி, திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கும் முறையைப் போன்று, திருநள்ளாறு வரும் பக்தர்களுக்கு சனீஸ்வர பகவானுக்கு விருப்பமான எள் உருண்டை பிரசாதம் தயார் செய்து விநியோகிக்கும் சோதனை முறைத் திட்டத்தை அண்மையில் தொடங்கினார். பக்தர்களிடையே வரவேற்பு இருந்ததையொட்டி சனிக்கிழமை முதல் முறைப்படி அதிகமான எள் உருண்டை தயார் செய்து பக்தர்களுக்கு கோவில் ஊழியர்கள் விநியோகம் செய்தனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாக அலுவலர் ஏ.ராஜராஜன்வீராசாமி கூறியது: ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு உரிய எள்ளை, இனிப்பு கலந்து பக்தர்களுக்கு விநியோகம் செய்ய முடிவு செய்தோம். எள், சர்க்கரைப்பாகு, ஏலக்காய், முந்திரி, பொட்டுக்கடலை, சுக்குப்பொடி கலந்து உருண்டையாக தயார் செய்து விநியோகிக்கிறோம். சனிக்கிழமை தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் வழங்குகிறோம். பக்தர்களின் வரவேற்பு இருக்கும்பட்சத்தில் மேலும் திட்டத்தை விரிவுபடுத்தி தினமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். திட்டம் விரிவுபடுத்தும் போது, இதற்கென போதிய நிதி ஒதுக்கி, ஊழியர்கள் நியமித்து சிறப்பான முறையில் செய்யப்படும் என்றார்.