சேத்துப்பட்டு அருகே குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்ட பக்தர்கள்
சேத்துப்பட்டு அருகே கோட்டுப்பாக்கம் கிராமத்தில் உள்ள பரதேசிஆறுமுகம் சுவாமிகள் கோயிலில் குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் சனிக்கிழமை மண் சோறு
சேத்துப்பட்டு அருகே கோட்டுப்பாக்கம் கிராமத்தில் உள்ள பரதேசிஆறுமுகம் சுவாமிகள் கோயிலில் குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் சனிக்கிழமை மண் சோறு சாப்பிட்டனர்.
சேத்துப்பட்டு அருகே உள்ள கோட்டுப்பாக்கம் கிராமத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு பரதேசி ஆறுமுகம் என்பவர் அப்பகுதியில் தங்கி அப்பகுதி மக்களுக்கு சித்த வைத்தியம் செய்து வந்தார். நாளடைவில் அவர் மீது அன்பு கொண்ட கிராம மக்கள் அங்கு இடம் ஒதுக்கி கொடுத்தனர்.
பின்னர் ஆறுமுகசுவாமிகள் கிராம மக்களை கூட்டி ஆடி அமாவாசை அன்று ஜீவசமாதி அடையபோகிறேன். அந்த இடத்தில் எனக்கு கோயில் கட்டி ஆடி அமாவாசை தோறும் குருபூஜை நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்றும், எனக்கு படைக்கும் சாதத்தை திருமணமாகி நீண்டநாள் குழந்தை இல்லாத பெண்களுக்கு கொடுத்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறினார்.
Advertisement
அவர் கூறியதுபோல அந்த பகுதியில் ஜீவசமாதி அடைந்தனர். இதனால் அவருக்கு அங்கு கோயில் கட்டி வருடந்தோறும் குருபூஜை நடத்தி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு இந்த ஆண்டு ஆடி அமாவாசை முன்னிட்டு சனிக்கிழமை பரதேசி ஆறுமுக சுவாமிக்கு குருபூஜை நடைபெற்றது. மேலும் அன்னதான விழாவும் நடைபெற்றது. மேலும் அங்கு இருந்த சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சமரச சன்மார்க்க சங்க அடியார்களது பஜனை ஊர்வலம் நடைபெற்றது.
மேலும் உலக அமைதிக்காகவும், குழந்தை பாக்கியம் பெற வேண்டியும் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் பிற்பகலில் படையல் வைத்து சுவாமிக்கு பிரசாதம் படைக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் குழந்தை பாக்கியம் இல்லாக பெண்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அவர்களுக்கு பரதேசி சுவாமிகள் மூலம் படைக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை பயபக்தியுடன் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் முந்தானையில்
பெற்றுக்கொண்டு அருகே உள்ள குளக்கரைக்கு சென்று படிகளில் பிரசாதத்தை வைத்து பெண்கள் மண்டியிட்டு இரண்டு கைகளை பின்னால் கட்டிக்கொண்டு மண் சோறு சாப்பிட்டனர்.
மேலும் கடந்த ஆண்டு மண் சோறு சாப்பிட்டு குழந்தை பேறு பெற்ற பெண்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை நாணயங்களை வைத்து ஆறுமுக சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோட்டுப்பாக்கம் கிராம மக்கள் செய்திருந்தனர்.