முகப்பு
ஆன்மிகம்

பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம்

தொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கும் இடையே உள்ள பகுதி 'நடுநாடு'  என வழங்கப்பெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:11 AM
பகிர்:

தொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கும் இடையே உள்ள பகுதி 'நடுநாடு'  என வழங்கப்பெற்றது. இப்பகுதி திருமுனைப்பாடிநாடு எனவும் இலக்கியங்களில் புகழ்ந்து பேசப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நடுநாட்டில் உள்ள தலங்களில் மிகச்சிறப்பு வாய்ந்தது பெண்ணாகடம் என்னும் திருத்தலம் ஆகும். தற்போது பெண்ணாடம் என அனைவராலும் அழைக்கப்படுகிறது. இத்தலம் 'கடந்தை' எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் இத்தலம் ஐராவதம் என்னும் யானை வழிபட்டதால் 'தயராசபதி' எனவும், புஷ்பாரண்யம், மகேந்திரபுரி, பார்வதிபுரம், நஞ்சுண்ட இறைவனின் களைப்பை போக்கியதால் 'சோகநாசனம்' எனவும், சிவபெருமானுக்கு உகந்த தலம் ஆதலால் 'சிவவாசம்' எனவும் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. வெள்ளாற்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.

சென்னை-திருச்சி ரயில் பாதையில் பெண்ணாகடம் ரயில் நிலையத்தில் இறங்கினால் 1 கி.மீ தொலைவில் திருக்கோயில் அமைந்துள்ளது. விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் 17   கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

புராண வரலாறு: உயர்ந்த மலர் சோலையாகிய இத்தலத்தில் இந்திரனின் பூஜைக்காக மலர்களை பறிக்க வந்த தேவ கன்னியர்கள், காமதேனு, ஐராவதம் என்ற யானை ஒன்றன்பின் பின் ஒன்றாக வந்து இறைவனைக் கண்டு மகிழ்ந்து இத்தலத்திலேயே இருந்துவிட்டன. பின்னர் இந்திரன் தானே வந்து இறைவனைக் கண்டு வழிபட்டான் என புராண வரலாறு கூறுகிறது. தேவ கன்னியர்கள் (பெண்) + காமதேனு (ஆ) + ஐராவதம் (கடம்) ஆகிய மூன்றும் இறைவனை வழிபட்டதால் இத்தலம் 'பெண்ணாகடம்'  என சிறப்பாக அழைக்கப்படுகிறது.

வாயிலை நோக்கி நந்தி:  உலகத்தை அழிக்க வந்த பிரளய கால வெள்ளத்தை இறைவன் நந்திதேவர் மூலமாக தடுத்து அருள்புரிந்த திருத்தலமாக விளங்குகிறது. இதனால் இக்கோயிலில் நந்தியைம் பெருமான் இறைவனை நோக்கியில்லாமல், கோயில் வாயிலை நோக்கி அமர்ந்த கோலத்தைக் கண்டு தரிசிக்கலாம். இதனால் பிரளய காலேசுவரர் என அழைக்கப்படுகிறார்.

திருமுறை சிறப்பு; ஞானசம்பந்தர் பெருமான், நாவுக்கரசர் பெருமான் இருவராலும் போற்றிப் பாடல் பெற்ற தலச்சிறப்புடன் விளங்குகிறது.

"மறையின் ஒலி தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர்தூங்கானை மாடம் தொழுமின்களே" என ஞானசம்பந்தர் போற்றுவதைக் காணலாம்.

திருநாவுக்கரசர் பெருமான் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு " பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம்" என்று துவங்கி "சூலக்குறியும், இடபக்குறியும்" (சூலமும்-ரிஷபமும்) தனக்கு பொறித்தருளுமாறு கனிவுடன் வேண்டுகிறார்.

இறைவனும் தனது கருணையால் அன்பு உள்ளத்துடன் சிவபூதகனம் ஒன்றினை ஏவ, அது அப்பர் பெருமானின் திருத்தோள்களில் சூலக்குறியும்-இடபக்குறியும் பொறித்த நிகழ்ச்சி நடைபெற்றது இத்தலத்தில். இதனை "வாகீசர் திருத்தோளில் சேடுயர் மூவிலைச் சூலம் சினவிடையுடன் சாத்த" - எனச் சேக்கிழார் பெருமான், திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில் இந்நிகழ்ச்சியை புகழ்ந்து போற்றுகிறார்.

இக்கோயிலில் சித்திரை மாத சதயவிழாவில் அப்பர் பெருமான் வேண்டிய விண்ணப்ப நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

திருக்கடந்தை புராணம்: இத்தலத்தின் சிறப்பினை சிவஞானப்பரான்பிள்ளை என்பவர் அருளிய திருக்கடந்தை புராணம் எடுத்துக் கூறுகிறது.

மெய்கண்ட தேவநாயனார்: சைவசித்தாந்தப் பேருண்மைகளைப் புலப்படுத்தும் 'சிவஞானபோதம்' என்றும் நூலை அருளிய மெய்கண்ட தேவ நாயனார் அவதரித்த தலம் இதுவே ஆகும்.

கலிக்கம்ப நாயனார்: சைவ சமயம் போற்றும் நாயன்மார்களில் கலிக்கம்பநாயனார் அவதரித்த தலம் இதுவே. கலிக்கம்பர் நாள்தோறும் சிவனடியார்களுக்கு அமுது படைப்பார். அப்பொழுது சிவனடியார்களின் திருவடிகளை, அவர் மனைவி நீர்வார்க்க தூய்மை செய்வார். ஒரு நாள் இவரிடம் முன்பு பணி செய்த பணியாளர் சிவனடியார் வேடம் கொண்டு வந்தார். வழக்கம் போல கலிக்கம்பர் அவரது திருவடிகளைப் பற்றினார். ஆனால் இவரது மனைவியார், இவன் நமது வேலைக்காரனாயிற்றே என்பதை நினைத்து நீர்வார்க்காமல் கால தாமதம் செய்தார். கலிக்காமர் கோபம் கொண்டு தனது மனைவியின் கையை வெட்டினார். சிவனடியார்களை போற்றுவதை குறிக்கோளாக கொண்டு விளங்கிய கலிக்கம்பர் இறைவன் அருள்பெற்றார். மனைவிக்கும் இறைவன் அருளியதால் 'கைவழங்கீசர்' என்ற பெயரும் இறைவனுக்கு உண்டு. திருக்கோயில் கோபுரம் அருகே கலிக்கம்பர் சந்நதி அமைந்துள்ளது.

இறைவன் - இறைவி: இத்தலத்தில் கோயில் கொண்டு விளங்கும் இறைவன் சுடர்க்கொழுந்தீசர், பிரளய காலேசுவரர் என்றும், இறைவி கடந்தை நாயகி, அழகிய காதலி என்றும் பெயர் கொண்டு அருள் பாலிக்கின்றனர்.

இறைவன் சதுர வடிவமான ஆவுடையாரில் உருவில் பெரிய சிவலிங்க வடிவாக காட்சி தரும் அற்புதக் கோலத்தை கண்டு தரிசிக்கலாம்.

இக்கோயில் கருவறை விமானம் "தூங்கானை மாட" வடிவில் (படுத்திருக்கும் யானை போன்று) அமைந்துள்ளது. இக்கோயில் கல்வெட்டுகளிலும் இறைவன் 'தூங்கானை மாடமுடைய நாயனார்' என்றே அழைக்கப்படுவதைக் காணலாம். விமானத்தில் காமதேனு, ஐராவதம் வழிபடும் தலவரலாற்றுக் காட்சிகள் மற்றும் இறைவடிவங்கள் அழகிய சுதை சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றன. கருவறையின் நுழைவு வாயிலில் துவாரபாலகர்கள் மற்ற கோயில்களைப் போன்று இல்லாமல், வாயிலின் இரு பக்கங்களிலும் ஒருவரை ஒருவர் நேராகப் பார்த்துக் கொண்டிருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்புடன் விளங்குகிறது. கருவறையின் பக்கச்சுவரின் மூன்று பக்கங்களிலும் சாளரங்கள் (ஜன்னல்) அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் வழியேயும் இறைவனை தரிசிக்கலாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பெண்ணாகடம் பிரளய காலேசுவரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா 23.04.2015 அன்று துவங்கி 04.05.2015 வரை நடைபெறுகிறது. திருநாவுக்கரசர் பெருமான் இறைவனை "பொன்னார்' திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்" என்று வேண்டி சூலம்-இடபம்(ரிஷபம்) முத்திரை இறை அருளால் பெற்ற நிகழ்ச்சி 27.04.2015 இத்தகைய வழிபாடு சிறப்புமிக்க பெண்ணாகடம் அழகிய காதலி சமேத பிரளய காலேசுவரர் திருக்கோயிலுக்கு மறையின் ஒலி தொடங்கும் கடந்தைத் தடங்கோயிலுக்கு "மறையின் ஒலி தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் - தொழுமின்களே" என்ற ஞானசம்பந்தர் வாக்கால் கண்டு வணங்கி, தொழுது இறையருள் பெறுவோம்!

கி.ஸ்ரீ தரன்

திருக்கோயில் தொடர்புக்கு: 04143 - 222980

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.